ஹைதராபாத்: இந்தியன் பிரிமியர் லீக் 2020 தொடரின் லீக் போட்டிகள் தற்போது நிறைவடைந்துள்ளன. கிரிக்கெட் விளையாட்டில் ஆர்வமுள்ள இளைஞர்கள் பலர் தற்போது ஒவ்வொரு பந்து, ஓவர், ரன்கள் மற்றும் விளையாடும் அணிகளின் வெற்றி மற்றும் தோல்வி ஆகியவற்றின் அடிப்படையில் சூதாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதுபோன்ற ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபடும் இளைஞர்கள் பலர் பெரும் பொருளாதார இழப்பை சந்தித்துவருகின்றனர். இதனால் மனமுடைந்து இளைஞர்கள் தற்கொலை செய்துவருவது தொடர்கதையாகி வருகிறது.
இந்நிலையில், தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தைச் சேர்ந்த 19 வயது இளைஞர் சோனு குமார் யாதவ் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக அவரது சகோதரர் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளார்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டதில், தேங்காய் விற்பனையாளரான இவர் ஐபிஎல் சூதாட்டத்தில் தொடர்ந்து மூழ்கி இருந்தது தெரியவந்தது. இந்த சூதாட்டத்தில் நிறைய பணத்தை இழந்ததால் மிகுந்த மனஉளைச்சலில் இருந்து வந்துள்ளார்.
பின்னர், நேற்று (நவ. 03) இவரது அறையிலுள்ள நண்பர்கள் பணிக்குச் சென்றதையடுத்து அவர், வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது தெரியவந்துள்ளது. இதையடுத்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் தொடர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
இதையும் படிங்க:”மதுவை விட மோசமான அழிவுகளை ஆன்லைன் சூதாட்டம் ஏற்படுத்தும்” - ராமதாஸ் எச்சரிக்கை