கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்திலுள்ள அஞ்சல் பகுதியைச் சேர்ந்தவர் சூரஜ். இவருடைய மனைவி உத்ரா. இவர்களுக்கு 2018ஆம் திருமணம் நடந்து தற்போது ஒரு வயதில் மகன் உள்ளார்.
உத்ரா அங்குள்ள தனியார் நிறுவனத்தில் எழுத்தராகப் பணியாற்றிவந்தார். இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு கணவருடன் தனது வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த உத்ராவின் காலில் பாம்பு கடித்தது. இதையடுத்து அலறிய உத்ரா அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டார்.
பின்னர், அங்கிருந்து திருவல்லாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்தனர். அங்கு 16 நாள்கள் சிகிச்சையிலிருந்த உத்ரா குணமடைந்து தாயார் வீட்டிற்கு வந்து மேலும் சில சிகிச்சைகளைப் பெற்றுவந்தார்.
இதையடுத்து, உத்ராவின் தாயார் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தபோது அங்கு சென்ற சூரஜ் வேறொரு பாம்பை வாங்கி உத்ராவை கடிக்கவைத்து கொலைசெய்தார். இதையடுத்து அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது உத்ரா இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இச்சம்பவத்தில் சூரஜ் மீது சந்தேகமடைந்த உத்ராவின் பெற்றோர், உறவினர்கள் அஞ்சல் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதில், "சூரஜ் வீட்டில் முதல்முறையாக உத்ராவை பாம்பு கடித்த அறை இருப்பது இரண்டாவது மாடி என்பதால் அங்கு பாம்பு வருவதற்கான சாத்தியமில்லை.
ஏற்கனவே அந்த வீட்டில் ஒருநாள் பாம்பு வந்ததாகவும் அதனை சூரஜ் கையால் பிடித்ததாகவும் உத்ரா கூறியிருந்தார். இதனால்தான் எங்களுக்குச் சந்தேகம் உள்ளது" எனக் காவல் துறையினரிடம் தெரிவித்தனர்.
மேலும், திருமணத்திற்கு 100 பவுன் நகை, கார் உள்ளிட்டவைகள் வரதட்சணையாக கொடுத்ததாகவும், இருந்தபோதிலும் உத்ராவிடம் வரதட்சணைக் கேட்டு துன்புறுத்திவந்ததாகவும் தெரிவித்தனர். இது திட்டமிட்ட சதி; இது குறித்து விரைவில் விசாரணை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டனர்.
இதையடுத்து, இப்புகார் மீது வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் சூரஜை காவல் நிலையம் அழைத்துவந்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் முன்னுக்குப் பின் முரணாகப் பதில் கூறிய சூரஜ், பின்னர், தான் செய்த குற்றத்தை ஒப்புக்கொண்டார்.
மனைவியைக் கொலைசெய்வதற்காக சூரஜ், சுரேஷ் என்பவரிடம் பாம்பை வாங்கிவந்து வீட்டில் அவரது மனைவியின் மீது வீசியதையும் ஒப்புக்கொண்டார். முதன்முறை பாம்புக் கடியிலிருந்து மீண்டுவந்ததால், இரண்டாவது முறை வேறொரு பாம்பை வைத்து கடிக்கச் செய்திருப்பது தெரியவந்தது.
மேலும், சூரஜுக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, மனைவியைக் கொன்ற சூரஜ், சுரேஷ் உள்ளிட்டோரை கைதுசெய்த காவல் துறையினர் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
இதையும் படிங்க: மனைவியைக் கொன்றுவிட்டு தற்கொலை செய்துகொண்ட கணவன்