சந்திரயான் 2 திட்டம் வெற்றிகரமாக நிறைவடையாமல் போனாலும், இந்திய விண்வேளி ஆய்வு மையமான இஸ்ரோ தனது அடுத்தடுத்த பணிகளில் கவனம் செலுத்திவருகிறது. அதன்படி ஒருபுறம் சந்திரயான் 3 திட்டத்துக்கு தயாராகிவரும் இஸ்ரோ, மறுபுறம் விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் ககன்யான் திட்டத்திற்கான பணிகளிலும் கவனம் செலுத்திவருகிறது.
விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் முன், முதலில் மனித உருவில் இருக்கும் ஹூமனாய்ட் எனப்படும் ரோபோவை அனுப்ப இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. அதன்படி ககன்யான் திட்டத்தின் கீழ், 2020ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் விண்வெளிக்கு அனுப்பவுள்ள ரோபோவுக்கு ’வயோம் மித்ரா’ என்ற பெண்ணின் பெயர் வைக்கப்பட்டுள்ளது.
இந்த வயோம் மித்ரா ரோபோ ஆங்கிலம், ஹிந்தி என்று இரு மொழிகளை புரிந்துக்கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், இது விண்வெளி வீரர்களுடன் உரையாடி அவர்களுக்கு ஏற்படும் சந்தேகங்களுக்கு பதில் அளிக்கும் வகையிலும் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த தகவல்களை இஸ்ரோ தலைவர் சிவன் உறுதிபடுத்தியுள்ளர்.
இதையும் படிங்க: நிழலுலக தாதா சோட்டா ராஜன் மீதான வழக்குகள்: சிபிஐ விசாரணை தொடக்கம்