கரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் தீவிரமடைந்துவருகிறது. குறிப்பாக, அமெரிக்கா, பிரேசில், இந்தியா ஆகிய நாடுகள் அதன் கோரதாண்டவத்தில் சிக்கி தவித்துவருகின்றன. இதற்கான மருந்தை கண்டுபிடிக்க முடியாமல் உலக விஞ்ஞானிகள் திணறிவந்த நிலையில், கரோனாவுக்கான மருந்தை கண்டுபிடித்து மனிதர்களிடம் வெற்றிகரமாக செலுத்தி ரஷ்யா பரிசோதனை செய்தது.
இந்நிலையில், நாட்டில் கண்டுபிடிக்கப்பட்ட இரண்டு மருந்துகளை 1,000 தன்னார்வலர்களுக்கு கொடுத்து பரிசோதனை மேற்கொண்டுவருவதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி மையம் தகவல் வெளியிட்டுள்ளது. உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட பாரத் பயோடெக் நிறுவனத்தின் 'COVAXIN', சைடஸ் கேடிலா நிறுவனத்தின் மருந்து ஆகியவற்றை மனிதர்கள் மீது பரிசோதிக்க இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு ஒப்புதல் வழங்கியது.
இதுகுறித்து அதன் இயக்குநரும் மருத்துவருமான பல்ராம் பார்கவா கூறுகையில், "உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட இரண்டு மருந்துகளின் ஆய்வக பரிசோதனை வெற்றிகரமாக முடிந்துள்ளது. இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பிடம் இதன் மூடிவுகள் சமர்பிக்கப்பட்ட நிலையில், அதனை மனிதர்கள் மீது பரிசோதிக்க ஒப்புதல் வழங்கப்பட்டது.
இதில், ரஷ்யா ஏற்கனவே வெற்றி கண்டுள்ளது. உலகின் எந்த மூலையில் மருந்துகள் தயாரிக்கப்பட்டாலும் அது இந்தியாவுக்கோ சீனாவுக்கோ அனுப்பியாக வேண்டும். கரோனாவுக்கான மருந்தை கண்டுபிடிக்க சீனா மும்முரம் காட்டிவருகிறது. அதேபோல், அமெரிக்கா, பிரிட்டன் நாடுகளில் ஆய்வுகள் வேகமாக நடத்தப்பட்டுவருகிறது.
அமெரிக்காவில் இரண்டு மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கரோனாவுக்கான மருந்தை மனிதர்கள் மீது செலுத்தி பரிசோதிக்க ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் மும்முரம் காட்டிவருகிறது" என்றார்.
இதையும் படிங்க: இந்தியாவின் இளம்வயது பிளாஸ்மா நன்கொடையாளர்