2009ஆம் ஆண்டு இந்தியாவில் ஆதார் திட்டம் தொடங்கப்பட்டது. ஐக்கிய அமெரிக்க நாட்டின் குடிமக்களுக்கு வழங்கப்படும் எஸ்.எஸ். என் (Social Security number) எனும் திட்டத்தை மையமாக வைத்து இத்திட்டம் தொடங்கப்பட்டது எனக் கூறப்படுகிறது. இந்தத் திட்டம் தொடங்கப்பட்ட நாள் முதலே உஷா ராமநாதன் அதனை எதிர்த்து வந்தார் . இதன் மூலம் தனிமனிதனின் உரிமைகளுக்கும் பாதுகாப்புக்கும் அபாயம் ஏற்படும் என எச்சரித்தார்.
ஆதார் அடையாள அட்டையின் மூலம் நம் கண்களின் விழித்திரை, கை ரேகை போன்ற உயிரியளவுகளையும் (பயோமெட்ரிக்), முகவரி உள்ளிட்ட சுயவிவரங்களையும் நம் அனுமதி இல்லாமலே ஒருவர் அறிந்துகொள்ள முடியும். சுதா ராமநாதன் எச்சரித்தது போலவே அதுபோன்ற சம்பவங்கள் நடந்தேறியது. ஒரு ஆதார் அட்டையின் விவரம் 500 ரூபாய்க்கு வாட்சப் மூலம் விற்கப்படுவதாக புகார்கள் எழுந்தன. அதேபோல் காரக்பூர் ஐஐடி பட்டதாரி ஸ்ரீவஸ்தவ் என்பவர் ஆதார் விவரங்களை ஹேக்கிங் செய்ததாக கைதுசெய்யப்பட்டார். இப்படி ஆதார் தொடர்பாக பல்வேறு பிரச்னைகள் எழுந்த வண்ணம் உள்ளன.
எனவே ஆரம்பம் முதலே இந்தத் திட்டத்துக்கு எதிராக குரல்கொடுத்த ஆராய்ச்சியாளர் உஷா ராமநாதனை கவுரவிக்கும் விதமாக அக்சஸ் நவ் (AccessNow.org) எனும் லாப நோக்கமற்ற சர்வதேச அமைப்பு அவருக்கு ‘மனித உரிமைகளின் கதாநாயகர் விருது’ வழங்கவுள்ளது. இந்த விருது வழங்கும் விழா வரும் ஜூன் 11 முதல் 14ஆம் தேதி வரை தூனிஸில் நடைபெறவுள்ளது. மனித உரிமைகள்-தொழில்நுட்ப மாநாட்டின் ஒரு பகுதியாக இந்த நிகழ்வும் நடைபெறுகிறது.
இந்த விருது உஷா ராமநாதன் உட்பட் ஐந்து பேருக்கு வழங்கப்படவுள்ளன. பக்ரைனைச் சேர்ந்த முகமது அல் மஸ்கதி, ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த லிஸ்ஸி ஓ ஷியா, தன்சானியாவைச் சேர்ந்த சய்டுனி ஜோவு, வெனிசுலாவை சேர்ந்த மரியேன் டயாஸ் ஹெர்னாண்டஸ் ஆகியோர் இவ்விருதினைப் பெறுகின்றனர். இவர்கள் அனைவரும் இணைய உலகத்திலும், பொதுவெளியிலும் மனித உரிமை மீறல்களுக்கு எதிராக தொடர்ந்து குரல்கொடுத்து வருகின்றனர்.
ஆதார் திட்டம் தனிமனிதனின் உரிமைகளுக்கும் பாதுகாப்புக்கும் எந்த விதத்தில் அச்சுறுத்தலை ஏற்படுத்தும் எனவும், இத்திட்டத்தை ஏன் சீரமைக்க வேண்டும் எனவும் பல்வேறு கட்டுரைகளை உஷா எழுதியுள்ளார்.