இந்தியாவில் 5ஜி அலைக்கற்றைக்கான ஏலம் இந்தாண்டு நடைபெறுவதாக இருந்தது. இருப்பினும், கோவிட்-19 பரவல் காரணமாக இந்த ஏலம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. சர்வேச அளவில் 5ஜி சேவை வழங்குவதில் சீன நிறுவனங்களான ஹவாய், ZTE ஆகிய நிறுவனங்களும், தென் கொரியாவைச் சேர்ந்த சாம்சங் நிறுவனமும் முன்னணியில் உள்ளன. கல்வான் பகுதியில் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து சீன நிறுவனங்களையும் பொருள்களையும் புறக்கணிக்க வேண்டும் என்ற மனநிலை இந்தியாவில் அதிகரித்துவருகிறது.
இந்நிலையில், இந்தியாவில் 5ஜி சேவைகளை வழங்கும்போது அதில் சீன நிறுவனங்களின் பங்களிப்பு இருக்கக் கூடாது என்பதை அகில இந்திய வர்த்தகர்கள் கூட்டமைப்பு மத்திய அரசுக்கு வலிறுத்தியுள்ளது. இதுதொடர்பான அகில இந்திய வர்த்தகர்கள் கூட்டமைப்பு மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத்திற்கு எழுதியுள்ள கடிதத்தில், "பல்வேறு நாடுகளிலும் பணம் மற்றும் வங்கி சார்ந்த மோசடிகளில் ஹவாய், ZTE ஆகிய நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளதாகக் குற்றச்சாடுகள் உள்ளன.
இவ்விரு நிறுவனங்களை இந்தியாவில் 5ஜி சேவை வழங்கும்போது அனுமதிக்கக் கூடாது என்ற எங்கள் கோரிக்கையை மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும். நாட்டின் பாதுகாப்பு இந்திய மக்களின் தனியுரிமையைக் கருத்தில்கொண்டு இந்தியாவில் 5ஜி சேவைகளை வழங்கும்போது அதில் சீன நிறுவனங்களான ஹவாய், ZTE ஆகிய நிறுவனங்களின் பங்களிப்பு இருக்கக் கூடாது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, அமெரிக்காவின் ஃபெடரல் கம்யூனிகேஷன்ஸ் கமிஷன், சமீபத்தில் சீன நிறுவனங்களான ஹவாய், ZTE ஆகிய நிறுவனங்களை "தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல்களை" ஏற்படுத்தும் நிறுவனங்களாக பட்டியலிட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: டிஜிட்டலில் பணம் செலுத்துபவர்களா நீங்கள்? - சைபர் காப்பீடு பெறுவது எப்படினு தெரிஞ்சுக்கோங்க?