உலகின் பல தலைவர்கள் வளமையுடனும் ஆடம்பரமாகவும் சுற்றிவந்தனர். ஆனால், சில தலைவர்களே பெரும் தாக்கத்தை உண்டாக்கி வரலாற்றில் புரட்சிக்கு வித்திட்டனர். ஆங்கிலேயர்களின் ஆட்சிக்கு எதிராக வன்முறையற்ற சத்யாகிரக வழியில் போர் தொடுக்க மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி இந்தியர்களை ஒன்று திரட்டினார். புரட்சிகர வழிமுறைகள் மூலம் சாதாரண எளிய மக்களை திரட்டி, ஊக்குவித்து அடுத்த கட்டத்திற்கு இட்டுச் சென்றவர் அண்ணல் காந்தியடிகள். சாக்ரடீஸின் ஞானம், பிரான்சிஸ்சின் பணிவு, புத்தரின் மனிதநேயம், துறவுத்தன்மை, லெனினின் மக்கள் ஆதரவு ஆகியவை அண்ணல் காந்தியடிகளுக்கு இருந்தது. வன்முறையற்ற வழியில் இந்தியா சுதந்திரம் அடைய வேண்டும் என அவர் நினைத்தார். சிறந்த பேச்சாளரான காந்தி, தன் ஜனநாயக குரல் மூலம் லட்சகணக்கான மக்களை வழி நடத்தினார். மக்களுடனே வாழ்ந்து அவர்களின் நம்பிக்கை, மரியாதை ஆகியவற்றை பெற்றவர் காந்தியடிகள். அவரின் போதனைகள் இந்தியாவுக்கு மட்டுமானது அல்ல உலகுக்கானது. அனைத்து காலத்திற்கும் பொருந்திவரக் கூடியது. வார்த்தைகள், எண்ணங்கள், செயல்கள் என அனைத்திலும் சுத்தமாக இருந்தார். தன் வாழ்க்கையே மக்களுக்கு சொல்லக் கூடியச் செய்தி என காந்தி பலமுறை தெரிவித்திருக்கிறார். கருத்து வேறுபாடுதான் அனைத்து மோதல்களுக்கும் காரணமாக இருக்கிறது. தனிநபர், இனம், சாதி, வர்க்கம், அரசியல், பிராந்தியம், தேசம், சர்வதேசம் ஆகிய அனைத்து படிநிலைகளிலும் மோதல் உருவாகிறது. அநீதி, மேலாதிக்கம், அவநம்பிக்கை, தவிப்பு ஆகியவையே மக்களை மோதல்களை நோக்கி தள்ளுகிறது. வன்முறையற்ற அமைதியான காந்திய வழியில் பிரச்னைகள் தீர்த்துக்கொள்வதை மக்கள் மறந்ததாலேயே மோதல்கள் அதிகரித்துவருகிறது.
20ஆம் நூற்றாண்டு துவக்கத்திலிருந்து வன்முறையின் மீது உலகிற்கு ஒரு ஈர்ப்பு ஏற்பட்டுள்ளது. ஹிரோஷிமா, நாகசாகி அணுகுண்டு தாக்குதல் 1945ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடந்ததிலிருந்து, அணுகுண்டு வைத்திருக்கும் நாடுகளுக்கிடையே மூன்றாம் உலக போர் மூண்டு விடுமோ என்ற அச்சம் நிலவிவருகிறது. இதுகுறித்து விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் கூறுகையில், "மூன்றாம் உலகப்போர் எந்த ஆயுதங்கள் கொண்டு நடத்தப்படும் என்று எனக்குத் தெரியவில்லை, ஆனால், நான்காம் உலகப்போர் ஒன்று மூண்டால் குச்சிகள், கற்கள் ஆகியவை வைத்துதான் நடத்தப்படும்" என்றார். முதலாம், இரண்டாம் உலகப்போரை தவிர்த்து உலகில் நடந்த 250 சிறுப்போர்களில் இதுவரை 50 கோடி மக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். உலகம் முழுவதும் நாடுகளுக்கிடையே 40 மோதல் சம்பவங்கள் நிகழ்ந்துள்ளது, உள்நாட்டு வன்முறைகளும் அதிகரித்துள்ளது. வன்முறைகளுக்கிடையே வாழ்ந்து கொண்டிருக்கும் யாரின் உயிரும் பாதுகாப்பாக இல்லை. ராணுவத்திற்காக அனைத்து நாடுகள் செலவிடும் அளவு 73 லட்சம் கோடிக்கும் மேலாக உயர்ந்துள்ளது. அதற்கான பட்டியலில் அமெரிக்கா, சீனா, சவுதி அரேபியாவிற்கு அடுத்து இந்தியா இடம்பெற்றுள்ளது. ராணுவ வீரர்களின் எண்ணிக்கை பட்டியலிலும் சீனாவுக்கு அடுத்து இந்தியாவே உள்ளது. 15 லட்சம் பேர் இந்திய ராணுவத்தில் சேவை செய்து வருகின்றார்கள். பொருளாதார வளர்ச்சிக்கு இணையாக வளர்ந்த நாடுகள் தேச பாதுகாப்புக்காக அதிகளவில் செலவிட்டு வருகின்றனர். சர்வதேச அளவில் ராணுத்திற்காக செய்யப்படும் செலவின் 70 விழுக்காடு குறிப்பிட்ட ஆறு நாடுகளே செய்கிறனறன. 15 விழுக்காடு தொழில்மயமான நாடுகளும், மீதமுள்ள 15 விழுக்காடு வளர்கின்ற நாடுகளும் செய்கின்றன. தேசிய பாதுகாப்பு, ராணுவம், பயங்கரவாத எதிர்ப்பு முதலியவற்றிற்கு உலக நாடுகள் அதிகம் செலவிடுவதால், சுகாதாரம், கல்வி, வீட்டு வசதி ஆகியவற்றிற்கு செலவிடும் நிதி குறைந்துள்ளது. உலகம் முழுவதும் 14,000 அணு ஆயுதங்கள் உள்ளது, இதில், 90 விழுக்காடு அமெரிக்கா, ரஷ்யா ஆகிய நாடுகள் வசம் உள்ளது. இந்தியா வசம் 140 அணு ஆயுதமும், பாகிஸ்தான் வசம் 160 அணு ஆயுதமும் உள்ளது. இதனை தவிர்த்து பொதுமக்கள், தங்களை பாதுகாத்துக் கொள்ள துப்பாக்கியை பயன்படுத்துகின்றனர். உலகில் 85 விழுக்காடு துப்பாக்கிகள் பொதுமக்களிடம் உள்ளது. இந்த பட்டியலில் அமெரிக்கா முதல் இடத்திலும், ஜெர்மனி, துருக்கி, ரஷ்யா, பிரேசில், இந்தியா ஆகிய நாடுகள் அடுத்தடுத்தும் உள்ளன.
காந்தியத்தை பின்தொடர்வது அவசியமா? காந்திய உலக ஒழுங்கு என்பது கலாச்சாரங்களிடையே அமைதியை வளர்த்தெடுப்பதே ஆகும். அதுமட்டுமல்ல நாடுகளுக்கிடையே நடக்கும் ராணுவ போட்டியை தவிர்ப்பதே ஆகும். காந்தியை பொருத்தவரை போர் தவறானது, ஏனெனில், அகிம்சை கொள்கைகளுக்கும், தருமத்திற்கும் அது எதிராக உள்ளது. சிறுபான்மையினரை உருவாக்கி, பெரும்பான்மையினர் தங்களின் விருப்பத்தை அவர்கள் மேல் திணிப்பதற்கு போர் உதவும். நீதியின் அடிப்படையில் பிரச்னைகளை பேசி தீர்க்க வேண்டும். வன்முறை, வன்முறையை மேலும் தூண்டும், ஆனால், அகிம்சை அதனை வென்றெடுக்கும். "என்னை பொருத்தவரை எதிரிகளே கிடையாது, துரோகிகள்தான் உள்ளனர், அவர்களையும் அன்பின் மூலம் வென்றெடுக்கலாம்" என காந்தி ஒருமுறை தெரிவித்திருந்தார். உலக அமைதி நிலைக்க மோதல்களை தவிர்க்க அகிம்சையை மேற்கொள்ள மக்களை காந்தி கேட்டுக்கொண்டார். சமூக, தேசிய, சர்வதேச அளவில் பதற்றம் நிலவுவதற்கு அமைதி இன்மையே காரணம். மக்களை இணைக்க அமைதி ஒன்றே திறவுகோல். உலக அமைதியை சீர்குலைக்க மட்டுமே போர் உதவும். எனவே காந்தியின் கொள்கைகளை பின்பற்றுவதே அவரின் 150ஆவது பிறந்த நாளுக்கு நாம் செய்யும் கடமை.