காஷ்மீர் பகுதியிலுள்ள கார்கில் பகுதியில் கடந்த 1999ஆம் ஆண்டு இந்தியா-பாகிஸ்தான நாடுகளுக்கிடையே பேர் மூண்டது. முதலில் பிரிவினைவாதிகள் போர்வையில் அப்பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தினர் ஊடுருவினர்.
அதைத்தொடர்ந்து, இரு நாடுகளுக்கும் இடையே சுமார் மூன்று மாதங்கள் தொடர்ச்சியாக நடைபெற்ற இந்தப் போரில் இந்தியா வெற்றி பெற்றது. கொட்டும் பனியில், உலகிலேயே உயரமான இமயமலைத் தொடரில் மிகுந்த சவால்கள் மத்தியில் நடந்த இந்த போரில் 500க்கும் மேற்பட்ட இந்திய வீரர்கள் உயிரிழந்தனர்.
இந்தப் போரில் இந்தியா வெற்றி பெற்றபோதும், கார்கில் பகுதியில் பாகிஸ்தானின் ஊடுருவல் எல்லைப் பகுதியில் இந்தியாவின் பலவீனங்களை வெளிச்சம் போட்டுக்காட்டியது. மீண்டும் இதேபோன்ற ஓர் ஊருடுவல் நடந்துவிடாமல் இருக்க கார்கில் உள்ளிட்ட இமயமலையில் இருக்கும் எல்லைப் பகுதிகளை இந்தியா பலப்படுத்தியது.
எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்:
1999ஆம் ஆண்டுக்கு முன்புவரை ஒரு பட்டாலியன் மட்டுமே கார்கில் பகுதியில் கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டுவந்தது. போருக்குப் பின், அப்பகுதியை கண்காணிக்க மூன்று பட்டாலியன்கள் ஈடுபடுத்தப்படுகிறது.
அதேபோல முஷ்கோ-டிராஸ்-கக்ஸர்-யால்டோர் எல்லைப் பகுதியில் முன்பு 3000 வீரர்களைக் கொண்ட ஒரு படைப்பிரிவு மட்டுமே பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டன. 1999ஆம் ஆண்டு மே மாத்திற்கு பின் இந்த எண்ணிக்கை 10 ஆயிரமாக உயர்த்தப்பட்டது.
இப்பகுதியிலுள்ள அனைத்து பட்டாலியன் தலைமையகங்களும் இப்போது உலோக சாலைகள் இணைக்கப்பட்டுள்ளன. சுமார் 15 ஆயிரம் அடிக்கு மேல் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் வீரர்கள் கடும் குளிரை தாங்க தேவையான வசதிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் படைகள் ஊடுருவிய பாதைகள் அனைத்தும் அடையாளம் காணப்பட்டு, அவை முற்றிலுமாக முடக்கப்பட்டது. அவ்வாறு முடக்கப்பட்ட பாதைகளில் சில பள்ளத்தாக்கு பகுதிகளும் அடக்கம்.
அப்பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படும் வீரர்களின் எண்ணிக்கை மூன்று மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம் பள்ளத்தாக்கு பகுதியில், பாதுகாப்பு பணிகளில் ஈடுபடும் இரு பட்டாலியன் படைகளுக்கு இடையேயான தூரம் கணிசமாக குறைக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் படைகள் ஊடுருவிய பாதைகள் அனைத்தும் முடக்கப்பட்ட நிலையிலும், எந்தெந்த பாதைகளில் ஊடுருவும் அபாயம் உள்ளனவோ அங்கு கண்ணி வெடிக்களும் புதைக்கப்பட்டுள்ளன.
எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதிக்கு அருகே, ஹெலிகாப்டர்கள் தரையிறங்க ஏதுவாக பல புதிய ஹெலிபேடுகள் அமைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் அங்குள்ள வீரர்களுக்கு தேவையான ஆயுதங்கள் உள்ளிட்ட பொருள்களை எளிதில் எடுத்துச் செல்ல முடியும்.
கார்கில் போருக்குப் பின்னர் லே விமான நிலையம் போர் விமான தளத்திற்கு ஏற்ற வகையில் மாற்றியமைக்கப்பட்டது. அதேபோல் இந்திய ராணுவமும் தனது வெடிமருந்து இருப்புகளை மாற்றியமைத்தது.
தற்போது அப்பகுதியுள்ள ராணுவ வீரர்களிடம் போதுமான பீரங்கி துப்பாக்கிகள் உள்ளன. ஆனால், அமெரிக்காவிடமிருந்து புதிதாக கொள்முதல் செய்யப்பட்ட M777 வகை அல்ட்ரா லைட் ஹோவிட்ஸர்கள்( M777 Ultra Light Howitzers) எப்போது இப்பகுதிக்கு வரும் என்பது குறித்து எந்த தகவலும் அதிகார்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.
இப்பகுதியில், புதிதாக இடப்பட்ட ஆப்டிகல் ஃபைபர் கேபிள்கள் மூலம் தகவல் தொடர்பு மேம்பட்டுள்ளது. மேலும், ஆளில்லா விமானங்கள் மற்றும் செயற்கைக்கோள் படங்களுடன் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அப்பகுதியிலுள்ள உள்ளூர் மக்களைக் கொண்டு மேற்கொள்ளப்படும் உளவு நடவடிக்கைகளும் பலப்படுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: கார்கில் போர்: தொலைபேசி உரையாடல் மூலம் உலகிற்கு தெரியவந்த உண்மை