நேபாள முன்னாள் அமைச்சர் சலீம் மியா அன்சாரியின் மகன் யூனுஸ் அன்சாரி. நேஷனல் டிவி குழுமத்தின் முன்னாள் தலைவரும், தொழிலதிபரான இவர் லாலிபூரில் உள்ள நாக்கு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்திய ரூபாய் நோட்டுகளைக் கடத்தியது தொடர்பாக யூனுஸுக்கு எதிராக நேபாள நீதிமன்றத்தில் வழக்கு நடந்துவருகிறது.
இதனிடையே, சிறையிலிருந்தபடி யூனுஸ், நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம் நடத்திவரும் டி-கம்பெனியுடன் இணைந்து நேபாளம், இந்தியாவில் பயங்கரவாதத் திட்டங்களைத் தீட்டி அதனைச் செயல்படுத்திவருவதாகக் கூறப்படுகிறது.
பாகிஸ்தானின் உளவுத் துறையான ஐஎஸ்ஐ உதவியுடன் யூனுஸ், சமீபத்தில் காஷ்மீரில் உள்ள பயங்கரவாதிகளுக்கு ஆயுதங்கள் விநியோகித்ததாகவும் சந்தேகிக்கப்படுகிறது.
முன்னதாக, காத்மாண்டு மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டிருந்த யூனுஸ் அன்சாரி இதுபோன்ற நிழல் உலக வேளைகளில் ஈடுபடுவதைத் தடுக்கவே, நாக்கு சிறைக்கு மாற்றப்பட்டதாக நேபாள காவல் துறை வட்டாரங்கள் கூறுகின்றன. நாக்கு சிறையில் பயங்கரவாதிகள், முக்கியக் குற்றவாளிகளை அடைக்கும் பிளாக் சி பிரிவில் யூனுஸ் அடைக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக ஐ.ஏ.என்.எஸ். செய்தி நிறுவனத்திடம் பேசிய நேபாள மத்திய காவல் துறையின் செய்தித்தொடர்பாளர் டிஐஜி நீரஜ் பகதூர் ஷாஹி, "வெளிநாட்டுப் பணத்தைக் கடத்திய வழக்கில் யூனுஸ், மூன்று பாகிஸ்தானியர்களைக் கைதுசெய்து சிறையில் அடைத்துள்ளோம். யூனுஸ் தொடர்பான தகவல்களைச் சரிபார்த்த பிறகே மற்ற விஷயங்களைத் தெரிவிக்க முடியும்" என்றார்.
ஆயுத விநியோகம்
காஷ்மீரில் உள்ள பயங்கரவாதிகளுக்கு யூனுஸ் ஆயுதம் விநியோகம் செய்தது குறித்து நேபாள மத்திய காவல் துறை உறுதிசெய்யவில்லை. நேபாளம்-பிகார் எல்லை வழியாக ஒரு டிரக் மூலம் இந்தக் கடத்தலானது அரங்கேறியதாகத் தெரிகிறது.
இதனிடையே, சிறையில் அடைக்கப்பட்டுள்ள யூனுஸ் அன்சாரியையும், அவரது கூட்டாளிகளையும் விருந்தினர்கள் பலர் சந்தித்துவருவதாகக் காவல் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
யூனுஸ் அன்சாரி, அவரது தந்தை சலீம் மியா அன்சாரி காஷ்மீர் பிரிவினைவாதிகளுக்கு ஆதரவு அளித்துவருவது உலகறிந்த உண்மை.
சலீம் மியா அன்சாரியால் நிறுவப்பட்டு, நேபாளத்தின் திராய் மாவட்டத்தில் செயல்பட்டுவரும் 'நேபாள முஸ்லீம் எதிஹாட் அசோஷியேஷன்' (NMEA) என்ற இஸ்லாமிய கூட்டமைப்பு, காஷ்மீரின் பிரிவினைவாத குழுக்களுக்கு முழு ஆதரவு தெரிவித்துவருவது குறிப்பிடத்தக்கது.
2015ஆம் ஆண்டு தந்தையின் மறைவைத் தொடர்ந்து, யூனுஸ் அன்சாரி பாகிஸ்தானுக்கு அடிக்கடிச் சென்றுவந்தார். இந்தப் பயணங்களின்போது காஷ்மீர் பிரிவினைவாத குழுக்களுடனும், பாகிஸ்தான் உளவுத் துறையான ஐஎஸ்ஐ-யின் உதவியுடன் செயல்படும் டி-கம்பெனியுடனும் அவர் நேரடித் தொடர்பில் இருந்துவந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், கடந்தாண்டு (2019) மே மாதம் கத்தாரிலிருந்து நேபாளம் வந்த யூனுஸ் அன்சாரி உள்ளிட்ட நான்கு பேரை மடக்கிய அந்நாட்டு சுங்கத் துறையினர், அவர்களிடமிருந்து ஏழு கோடி மதிப்புள்ள கள்ள இந்திய ரூபாய் நோட்டுகளைப் பறிமுதல்செய்தனர்.
அன்சாரியுடன் கைதுசெய்யப்பட்ட மூன்று பேர் ஐஎஸ்ஐ-யைச் சேர்ந்தவர்கள் எனக் கூறப்படுகிறது.
இதையும் படிங்க : 'தடுப்பு மருந்தை உருவாக்குவதில் சர்வதேச ஒத்துழைப்பை வலுவூட்ட சீனா முயற்சி'