கடந்த ஜூன் 15ஆம் தேதி மாலை, கிழக்கு லடாக்கில் ஷியோக்-கல்வான் ஆகிய நதிகளின் அருகே இந்தியப் பாதுகாப்புப் படைத் தளபதி, மூத்த அலுவலர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்துள்ளார். அப்போது, ஒரு சிறிய ரோந்து வாகனத்தில் 16 பிகார் படைப் பிரிவினர் உள்ளிட்ட இந்தியப் பாதுகாப்புப் படையினர், சீனர்களை அப்பகுதியிலிருந்து திரும்பிச் செல்லுமாறு தெரிவிக்க புறப்பட்டனர்.
இப்படையினர் அப்பகுதிக்குச் சென்றபோது, அங்கு சுமார் 10 முதல் 12 சீனப் படையினர் இருந்துள்ளனர். இந்தியப் பாதுகாப்புப் படையினர் அவர்களிடம், ”இரு நாட்டு உயர் ராணுவ அலுவலர்கள் இடையே பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. உடனடியாக நீங்கள் சீனப் பகுதிக்குத் திரும்ப வேண்டும்” எனத் தெரிவித்துள்ளனர். ஆனால், அதற்கு சீனப் படையினர் மறுப்பு தெரிவித்துள்ளனர். இத்தகவலை இந்திய ராணுவத் தளத்தில் தெரிவிக்க இந்தியப் படையினர் அங்கிருந்து புறப்பட்டுள்ளனர்.
இச்சமயத்தைப் பயன்படுத்திய சீனப் படையினர் சுமார் 300க்கும் அதிகமான வீரர்களை அழைத்து படையின் பலத்தை அதிகரித்துள்ளனர். இதையறியாமல் கமெண்டர் சந்தோஷ் பாபு தலைமையிலான இந்தியப் படையினர் அப்பகுதிக்கு மீண்டும் சென்றுள்ளனர். அப்போது சீனப் படையினர் இந்திய வீரர்கள் மீது தாக்குதல் தொடுக்க கற்களையும் ஆயுதங்களையும் தயார் நிலையில் வைத்திருந்ததாகக் கூறப்படுகிறது.
இதனிடையே இரு படையினருக்கும் இடையிலான பேச்சுவார்த்தை சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. இந்தியப் பகுதியிலிருந்த சீனாவின் டென்ட்டை இந்தியப் படையினர் எடுக்க முயன்றுள்ளனர். அப்போது, தாக்குதலுக்குத் தயாராகிருந்த சீனப் படையினர் இந்தியப் படையினரைத் தாக்கியுள்ளனர். சுமார் மூன்று மணி நேரத்திற்கும் மேலாக இரவில் நடைபெற்ற இந்தத் தாக்குதலில் இரு நாடுகளின் படை வீரர்களும் உயிரிழந்துள்ளனர்.
இச்சூழலில் அதிகாலை பிரச்னை கட்டுக்குள் வந்த பின்னர் இறந்துகிடந்த சீன வீரர்களின் சடலங்களை இந்தியப் படையினர் அவர்களிடம் ஒப்படைத்துள்ளனர். இந்தத் தாக்குதலின்போது இந்தியத் தரப்பில் 100 வீரர்களும், சீனத் தரப்பில் 300க்கும் மேற்பட்ட வீரர்களும் இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்த இக்கட்டான சூழலில் பிகார் படையினர் சீனப் படையினரை பிபி-14 பகுதியிலிருந்து அகற்றியதாகவும் ராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.