சினிமாவில் நகைச்சுவைக்காக எடுக்கப்படும் பல காட்சிகள், நிஜ வாழ்வில் அங்கேறுவதுண்டு. அந்த மாதிரியான ஒரு சம்பவம் சத்தீஸ்கர் மாநிலத்தில் நடந்துள்ளது.
வடிவேலு திரைப்படம் ஒன்றில், அய்யா எனது கிணற்றை காணோம் கண்டுப்பிடிச்சி கொடுங்க... என்று சொல்லி காவல்துறையினரை அலரவிட்டிருப்பார். அரசாங்க ஊழியர்களின் ஊழல்கள் குறித்து மேலோட்டமாக அந்தக் காட்சி அமைந்திருக்கும்.
அதேபோல், சத்தீஸ்கர் மாநிலம் பென்ராவில், பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் பயனாளர்கள் பட்டியிலில் தங்களின் பெயர்கள் இடம்பிடித்திருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த இரு குடும்பத்தினர், மத்திய, மாநில அரசுகள் தங்களுக்காக கட்டிக்கொடுக்கப்பட்ட வீட்டை கண்டுபிடித்து தருமாறு காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
இது குறித்து வீடு கட்டிக்கொடுக்காமலே பயனாளிகள் பட்டியலில் பெயர் இணைக்கப்பட்டவர்கள் கூறுகையில், “தங்களது பெயர்கள் பயனாளிகள் பட்டியலில் இடம்பெற்று இருக்கிறது. ஆனால், இதற்கான தொகையே அல்லது வீடு எங்கு கட்டப்பட்டு இருக்கிறது என்ற எந்ததொறு தகவலுமே இல்லை.
நாங்கள் இன்னும் குடிசை வீட்டில் தான் வசிக்கிறோம். மழைக் காலங்களில் வீட்டினுள் மழை நீர் புகுந்து பெரும் சிரமத்தில் ஆழ்த்தும். எங்களுக்காக மத்திய அரசு வீடு கட்டிக் கொடுத்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. அந்த வீடு எங்கே இருக்கிறது என்பதுதான் தெரியவில்லை” என்றனர்.
இதுதொடர்பாக மாவட்ட செயல் அலுவலரிடம் கேட்டபோது, “இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு, ஊழலில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும்” என தெரிவித்தார்.
பயனாளிகள் இருவருக்கும் நீதி கிடைக்க அனைத்துவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படும் என்று உறுதியளித்த அம்மாவட்ட ஆட்சியர், இந்த விவகாரம் தொடர்பாக முழு தகவல் அறிக்கை தாக்கல் செய்ய சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: கரோனா சிகிச்சை மருந்துத் தயாரிப்பில் களமிறங்கும் இந்திய நிறுவனங்கள்