புதுச்சேரி சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் இன்று ( ஜூலை 10) செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, புதுச்சேரி ஆளுநர் மாளிகையில் கரோனா பரிசோதனை 37 பேருக்கு செய்யப்பட்டது.
அதில் ஒருவருக்கு தொற்று இருப்பதாக நான் தெரிவித்தேன். அதன்பிறகு ஆளுநர் மாளிகையில் இருந்து யாருக்கும் தொற்று அறிகுறி இல்லை என செய்தி வெளியிடப்பட்டது. இது தவறான செய்தி.
ஆளுநர் மாளிகையில் கம்ப்யூட்டர் டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் ஆக பணிபுரிந்த 26 வயது நபருக்கு நோய்தொற்று இருப்பது 100 சதவீதம் உண்மை. எதிர்காலத்தில் இதுபோன்ற தவறான தகவல்கள் வரக்கூடாது.
கடந்த 6 நாட்களாக ஆளுநர் மாளிகையில் இருந்து கரோன குறித்த தவறான தகவல்கள் வந்தன. ஆனால் நான் தினமும் கரோன தொற்று தொடர்பான தகவல்கள், மண்டல வாரியாக எத்தனை பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது, எத்தனை பேருக்கு நோய்தொற்று வந்துள்ளது, எத்தனை பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என சரியான தகவலை தெரிவித்து வருகிறேன்.
எனவே தவறான தகவலை கூறி யாரும் மக்களை குழப்ப வேண்டாம். புதுச்சேரியில் இன்று( ஜூலை 10) புதிதாக 72 பேருக்கு கரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதுவரை மொத்த பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1, 272. இதில் சிகிச்சையில் இருப்போர் 618. குணமடைந்து வீடு திரும்பிய வர்கள் 637 நபர்கள் என மல்லாடி கிருஷ்ணாராவ் தகவல் தெரிவித்துள்ளார்.
இன்று ( ஜூலை 10) புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் மக்கள் தொடர்புப் பிரிவில் பணியாற்றிய முதுநிலை ஊழியர் ரவி என்பவர் கரோனா நோய்தொற்றுக்குப் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதனால் புதுச்சேரியில் கரோனா நோய்த் தொற்றுக்கு பலியானோர் எண்ணிக்கை 17 ஆக உயர்ந்ததுள்ளது.