நாட்டின் அலுவல் மொழியாக இந்தி 1949ஆம் ஆண்டு செப்டம்பர் 14ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. இந்தி மொழியைப் பிரபலப்படுத்தும் வகையில் இந்த நாள் அரசு விழாவாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து உள்துறை அமைச்சர் அமித் ஷா தன் ட்விட்டர் பக்கத்தில், "உலக அளவில் இந்தியாவின் அடையாளமாக ஒரு மொழியை பிரபலப்படுத்துவது முக்கியத்துவம் பெறுகிறது. நாட்டில் பல மொழிகள் பேசப்பட்டுவருகிறது. அனைத்து மொழிகளுக்கும் தனி முக்கியத்துவம் உண்டு.
இந்தியாவை ஒருங்கிணைக்கும் சக்தி ஒரு மொழிக்கு உண்டு என்றால் அது பெரும்பான்மை இந்தியர்களால் பேசப்படும் இந்தி மொழியால் மட்டுமே முடியும்" என்றார். நாட்டின் தேசிய மொழியாக இந்தியை அறிவிப்பதற்கான முன் முயற்சி இந்த பேச்சில் தெரிகிறது என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
நாட்டின் அலுவல் மொழியாக இந்தி, ஆங்கிலம் ஆகியவை பயன்படுத்தப்பட்டு வந்தாலும், பல நாட்களாகவே இந்தியை தேசிய மொழியாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை சிலர் வைத்து வருகின்றனர். முன்னதாக வெளியிடப்பட்ட புதிய கல்விக் கொள்கையில், தென் மாநிலங்களில் உள்ள பள்ளிகளில் இந்தி கட்டாய மொழியாக்கப்படும் என்ற அறிவிப்பு இடம் பெற்றிருந்தது. இதற்கு தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து இந்தி கட்டாய மொழியாக்கப்படும் என்ற பத்தி நீக்கப்பட்டது.