உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் உள்ள ஹத்ராஸில் 19 வயது மதிக்கத்தக்க பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, முதுகெலும்பு உடைக்கப்பட்டு கொடூரமான முறையில் தாக்கப்பட்டு ரத்த வெள்ளத்தில் சாலையில் கிடந்தார்.
அவர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்த நிலையில் கடந்த 29ஆம் தேதி உயிரிழந்தார். இதையடுத்து உயிரிழந்த பெண்ணின் உடலை பெற்றோரிடம் ஒப்படைக்காமல் காவல் துறையினரே தகனம் செய்ததால் இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
அப்பெண்ணுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்றும், பாலியல் குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை வழங்க வேண்டும் எனவும் எதிர்க்கட்சிகள், பல்வேறு அரசியல் தலைவர்கள், பொதுமக்கள் வலியுறுத்திவருகின்றனர்.
பாதிக்கப்பட்ட பெண் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாகவில்லை என காவல் துறை தரப்பு தகவல் வெளியிட்டது. இதையே தடயவியல் வல்லுநர்கள் உறுதிசெய்தனர். இதற்கிடையே, பாதிக்கப்பட்ட பெண் மீது பாஜக திட்டமிட்டு அவதூறு பரப்புவதாக பிரியங்கா காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார்.
இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "பாதிக்கப்பட்ட பெண்ணின் மீது அவதூறு பரப்பி குற்றத்திற்கு அவர்தான் காரணம் எனச் சொல்வது கொந்தளிப்பை ஏற்படுத்துகிறது. வழக்கில் இது பெரும் பின்னடைவு. பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தாரிடம் அனுமதி கேட்காமலேயே உடல் எரிக்கப்பட்டுள்ளது" எனப் பதிவிட்டுள்ளார்.
இந்த வழக்கை சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரித்துவரும் நிலையில், சிபிஐக்கு மாற்ற உத்தரப் பிரதேச அரசு பரிந்துரை செய்துள்ளது. பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தாரை சந்திக்க ராகுல் காந்தியும் பிரியங்கா காந்தியும் கடந்த வாரம் ஹத்ராஸுக்கு சென்றது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ஹத்ராஸ் கொடூரம்: உயிரிழந்த பெண் குறித்த தகவலை வெளியிட்ட பாஜக அமித் மால்வியாவுக்கு நோட்டீஸ் !