இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, சீன அதிபர் ஷி ஜின்பிங் இடையேயான சந்திப்பு சென்னை அடுத்த மாமல்லபுரத்தில் நாளை (அக். 11) நடைபெறவுள்ளது. இருநாட்டுத் தலைவர்களும் பல முக்கிய பிரச்னைகள் குறித்து நாளை, நாளை மறுநாள் விவாதிக்கவுள்ளனர்.
முக்கியத்துவம் வாய்ந்த இந்தச் சந்திப்பு பல வரலாற்று சுவடுகளைத் தட்டி எழுப்புகிறது. ஷி ஜின்பிங்குக்கு முன்னரே 1956ஆம் ஆண்டு சீன பிரதமராக இருந்த சூஎன்லாய் சென்னை வந்துள்ளார். அப்படி என்ன தொடர்பு உள்ளது சீனாவுக்கும் சென்னைக்கும் இடையே என்ற கேள்வி எழாமலும் இல்லை. 2000 ஆண்டுகள் பழமைவாய்ந்த சீனா-சென்னை வரலாற்று தொடர்பே இதற்கான விடயமாகும்.
சங்க காலத்தில், பல்லவர்கள், சோழர்கள் ஆகியோர் ஆண்டபோது மாமல்லபுரம் முக்கியமான வரலாற்று நகரமாக இருந்துள்ளது. தென்னிந்தியாவிற்கு முக்கியமாக தமிழ்நாட்டிற்கு சீன அரசர்கள் வணிகர்களை அனுப்பினர். இந்திய வணிகர்களும் சீனாவிற்குச் சென்று வணிகம் மேற்கொண்டனர். அங்குள்ள முக்கிய நகரங்களில் அவர்களில் ஒரு சிலர் நிரந்தரமாகக் குடியேறினர்.
சீனா-தமிழ்நாட்டிற்கு இடையேயான உறவு குறித்து இலக்கிய, வரலாற்றுச் சான்றுகள் உள்ளன. பழங்காலம் முதலே இந்திய - சீன நாடுகளுக்கிடையே ஏற்றுமதி, இறக்குமதி நடந்துள்ளது. சீனாவில் உற்பத்தி செய்யப்படும் பட்டு கிழக்கு கடற்கரை வழியாக மேற்கத்திய நாடுகளுக்கு எடுத்துச் செல்லப்பட்டது. பல்லவ மன்னனான நரசிம்மவர்மன் காலத்தில் தனது செய்தித் தொடர்பாளரை அவர் சீனாவிற்கு அனுப்பினார். இதன்மூலம் பல்லவர்கள், சீனர்கள் ஆகியோருக்கிடையே நல்ல உறவு இருந்தது வரலாற்றுச் சான்றுகள் மூலம் தெளிவாகிறது.
வணிகர்களான திசை ஐநூற்றுவர், மணிகிராமத்தார் ஆகியோர் சீனாவில் குடியேறியது கல்வெட்டுகள் மூலம் உறுதியாகிறது. கடியலூர் உருத்திரங்கண்ணனாரால் எழுதப்பட்ட பட்டினப்பாலை நூலில் சீனப் பொருள்கள் பற்றியான குறிப்பு உள்ளது. பல்லவர்களுக்குப் பல பரிசுப் பொருள்களை சீன அரசர்கள் அனுப்பியுள்ளனர். சீன அரசர்களின் வேண்டுகோளை ஏற்று பல்லவர்கள் நாகப்பட்டினத்தில் புத்த கோயிலை கட்டினர். நாகப்பட்டினத்தில் உள்ள அந்த புத்தர் கோயிலில் பல்லவர்களும் சீனர்களும் வழிபாடுகளை நடத்தினர். இன்றைய காலகட்டத்திலும் அங்கு வழிபாடுகள் நடைபெற்றுவருகிறது. பட்டுத்துணியை எப்படி நெய்ய வேண்டும் என்பதை சீனர்களிடமிருந்தே தமிழர்கள் கற்றுள்ளனர்.
சென்னைக்கும்-சீனாவுக்குமான இப்படிப்பட்ட தொடர்பு 1956ஆம் ஆண்டு மீண்டும் தட்டியெழுப்பப்பட்டது. ஆம், 1956 டிசம்பர் 5ஆம் தேதி அன்றைய சீனப் பிரதமர் சூஎன்லாய் இரண்டு நாள் பயணமாக சென்னை வந்தார். அப்போது அன்றைய சென்னை மாகாண ஆளுநர் ஸ்ரீபிரகாசா, அன்றைய முதலமைச்சர் காமராஜர் ஆகியோர் அவரை வரவேற்றனர். இன்றைய நேரு உள்விளையாட்டு அரங்கம் அமையப்பெற்ற சென்னை மாநகராட்சி மைதானத்தில், சிறப்பான வரவேற்பு அவருக்கு அளிக்கப்பட்டது.
பின்னர், அண்ணா மேம்பாலத்திற்கு கீழ் அன்றிருந்த ஜெமினி படப்பிடிப்பு தளத்திற்கு சென்ற சீன பிரதமரை தொழிலதிபர் எஸ்.எஸ். வாசன் தொழிலாளர்களுடன் வரவேற்றார். ஜெமினி ஸ்டுடியோவில் சினிமா படப்பிடிப்பையும் நடிகை பத்மினி நடனத்தையும் சூஎன்லாய் கண்டுகளித்தார்.
தொடர்ந்து பெரம்பூர் ரயில் பெட்டி தொழிற்சாலை (ICF) உள்ளிட்ட இடங்களை சீனப் பிரதமர் சூஎன்லாய் பார்வையிட்டார். அங்கிருந்த வரவேற்பு புத்தகத்தில், "நவீனமாக ரயில் பெட்டி தயாரிப்பது சிறப்பாக இருக்கிறது. இந்தியா இதில் பெருமை கொள்ள வேண்டும்" என குறிப்பிட்டிருந்தார். ஜி.யு. போப்பின் திருக்குறள் ஆங்கில மொழிபெயர்ப்பினை ஆளுநர் ஸ்ரீபிரகாசா, சீன பிரதமருக்கு வழங்கினார் .
வரலாறு திரும்பும் விதமாக 63 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ஒரு சீனத் தலைவரான அந்நாட்டு அதிபர் ஷி ஜின்பிங் இரண்டு நாள் பயணமாக சென்னைக்கு நாளை வருகிறார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்தச் சந்திப்பு பல வரலாற்று நிகழ்வுகளை நினைவுகூர உதவியுள்ளது.