டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக (ஜேஎன்யு) வளாகத்தில் பருவநிலை (செமஸ்டர்) தேர்வுகளை ஒத்திவைக்கக்கோரியும், தேர்வுக் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் அப்பல்கலைக்கழக மாணவர்கள் நேற்று அமைதிப் பேரணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது இரும்புக் கம்பி, உருட்டுக்கட்டையோடு வந்த முகமூடி கும்பல் அங்கிருந்தவர்களைச் சரமாரியாகத் தாக்கியது. இந்தச் சம்பவத்தில், ஜேஎன்யு பல்கலைக்கழக மாணவர் சங்கத் தலைவர் அய்ஷி கோஷ், பேராசிரியர்கள், மாணவர்கள் உள்பட 50 பேர் காயமடைந்தனர். இந்நிகழ்வு நாடெங்கிலும் மாணவர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த வன்முறைச் சம்பவத்தை நிகழ்த்தியது ஆர்எஸ்எஸ்ஸின் மாணவர் அமைப்பான அகில பாரதிய வித்யார்த்தி பரிஷாத்தைச் (ABVP) சேர்ந்த உறுப்பினர்கள் என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இந்த நிலையில், இந்து ரக்ஷா தல் என்ற இந்து அமைப்பு வன்முறைச் சம்பவங்களை நிகழ்த்தியதாக பொறுப்பேற்றுக் கொண்டுள்ளது.
அந்த அமைப்பின் தலைவர் பிங்கி சௌத்ரி கூறுகையில், "நாட்டின் நலனுக்கு எதிராக யார் செயல்பட்டாலும் நாங்கள் அவர்களைத் தாக்குவோம். இந்தச் செயல்களை நாங்கள் தொடர்ந்து செய்வோம்" என்று கூறியுள்ளார்.
இதையும் படிங்க: 'ஜனநாயகத்தைக் கண்டு அவமானப்படுகிறேன்' - மம்தா