புதுச்சேரி சட்டப்பேரவையைச் சேர்ந்த ரங்கப்பிள்ளை வீதியிலுள்ள, புதுச்சேரி பிஎஸ்என்எல் தலைமை அலுவலகத்தில் மக்களவை உறுப்பினர் வைத்திலிங்கம் நேற்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்டுவரும் பிஎஸ்என்எல் சேவைகள் குறித்தும், அதன் மேம்பாடுகள் குறித்தும் கேட்டறிந்தார்.
அதைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், தனியார் தொலைத்தொடர்பு சேவைகள் போன்று பிஎஸ்என்எல்லிலும் வாடிக்கையாளர்களுக்கு 4ஜி (நான்காம் தலைமுறை அலைக்கற்றை) அலைவரிசை வழங்க வேண்டும் என மத்திய அரசிடம் தான் கோரிக்கை வைத்துள்ளதாகக் குறிப்பிட்டார்.
பின்னர் மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷாவின் இந்தி தொடர்பான கருத்து குறித்து செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு, “இந்தி இந்தியாவை ஒருங்கிணைக்காது; பிஎஸ்என்எல்தான் ஒருங்கிணைக்கும். எனவே பிஎஸ்என்எல் 4ஜியை முதலில் கொடுங்கள், பின்னர் இந்தியை கொடுக்கலாம்” என பதிலளித்தார்.