இமாச்சலப் பிரதேசத்தின் சேரி கியுண்ட் கிராமத்தைச் சேர்ந்த நிதி டோக்ரா(11) செப்டம்பர் 13ஆம் தேதி ஒரு நிமிடத்தில் 35 வெவ்வேறு ஆசனங்களைச் செய்து யோகாவில் உலக சாதனை படைத்துள்ளார்.
இந்நிலையில்,அகில இந்திய யோகா கூட்டமைப்பு (ABYM) சார்பாக மெய்நிகர் போட்டி நடைபெற்றது. இதில் நிதி டோக்ரா கலந்துகொண்டு 45 நிமிடங்கள் பிரணவ் ஆசனம் செய்து உலக சாதனை படைத்தார். மேலும், அவர் யோகா ரத்னா விருதையும் பெற்றுள்ளார்.
7 ஆம் வகுப்பு படித்து வரும் நிதிக்கு சிறுவயதிலிருந்தே யோகா மீது விருப்பம் இருந்ததையடுத்து, அவரது தந்தை சஷி குமாருடன் வீட்டில் யோகா கற்றுக் கொண்டுள்ளார். அவரது தந்தை சஷி குமார் கூறுகையில், "தொழில்நுட்பக் குழுவின் ஒப்புதலைத் தொடர்ந்து, நிதிக்கு உலக சாதனை சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது” என்றார்.
நிதியின் தாய் நிஷா தேவி கூறுகையில், “மகளின் சாதனை குறித்து மிகுந்த மகிழ்ச்சியடைந்தேன். கரோனா தொற்று காரணமாக குழந்தைகள் பள்ளிக்குச் செல்ல முடியாத சூழ்நிலை உள்ளது. எனவே, அவர்கள் விரும்பியபடி விளையாட வாய்ப்பு வழங்கப்பட வேண்டும்” என்று கூறினார். நிதியின் பாட்டி கர்மச்சந்த் பேசுகையில், ”தனது பேத்தி மாநிலத்தின் பெயரையும், நாட்டின் பெயரையும் ஒளிரச் செய்துள்ளார்” என்று கூறினார்.
இதுகுறித்து நிதி கூறுகையில், ”எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக,மேகத்தில் மிதப்பது போன்றுள்ளது. இப்போது யோகாவில் இரண்டு முறை உலக சாதனைகளை படைத்துள்ளேன்”என்று கூறினார்.
இதையும் படிங்க: