உலகம் முழுவதும் பெரும் உயிரிழப்புகளை ஏற்படுத்திவரும் கோவிட்-19 பெருந்தொற்று கடந்த 30 நாள்களாக இந்தியாவில் இரண்டாம் கட்ட பரவல் நிலையை எட்டி தீவிரமடைந்துவருகிறது. இதுவரை 16 ஆயிரத்து 103 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 527 பேர் உயிரிழந்தனர் என மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
நாளுக்கு நாள் அதிகரித்துவரும் கரோனா வைரஸ் பாதிப்பைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரும் நடவடிக்கையாக முழுமையான ஊரடங்கை மத்திய அரசு அறிவித்திருந்தது. இதன் காரணமாக விளிம்புநிலை மக்கள் பெரும்பாதிப்பிற்கு ஆளாகியுள்ளனர்.
இதன் ஒரு பகுதியாக, பொது இடங்களில் சாலையோரங்களில் வாழ்வை நடத்திவரும் திருநர்கள் வாழ்வும் சிக்கலுக்குள்ளாகி இருக்கிறது. பெற்றோர்கள், உற்றார் உறவினர்கள் என பலராலும் புறக்கணிக்கப்பட்டிருக்கும் அவர்களில் பெரும்பாலானோர் பஸ் ஸ்டாண்டிலும், ரயில் நிலையத்திலும் பிச்சை எடுப்பதன் மூலம் தங்கள் வாழ்க்கையை நடத்திவந்தனர். தற்போது மக்கள் நடமாட்டம் இல்லாத நிலையில், வருமானத்திற்கு வழியின்றி தினமும் பட்டினி கிடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பாக கருத்து தெரிவித்த திருநர் சமூகத்தினர், “கரோனா வைரஸ் பெருந்தொற்றுப் பரவலைத் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நமது பிரதமர் அறிவித்துள்ள ஊரடங்கை, அவரது வார்த்தைகளை நாங்கள் மதிக்கிறோம். நாங்கள் வீட்டை விட்டு வெளியே வரமாட்டோம். ஏனென்றால் மக்களின் வாழ்க்கை எங்களுக்கு முக்கியம்.
எங்களால் உணவைப் பெற முடியவில்லை என்றாலும், நாங்கள் ஊரடங்கை மதிப்போம். எங்களுக்குள் முதியவர்களும் சிறுவர்களும் இருக்கின்றனர். அவர்களுக்கு தேவையான உதவிகளை மட்டுமே நாங்கள் அரசிடமிருந்து எதிர்பார்க்கிறோம் என்கின்றனர்.
இதையும் படிங்க : சந்தேகக் கண்ணாடிகளின் வழியே காஷ்மீர் குறித்த பார்வை
!