மகாராஷ்டிரா மாநிலம் மும்பை கண்டிவாலா பகுதியைச் சேர்ந்த கல்பவ்ரிக்ஷகிரி மகாராஜ்(70), அவரது உதவியாளர் சுனால்கிரி மகாராஜ்(35), ஜூனா அகாதா, மற்றும் அவர்களின் ஓட்டுநர் நிலேஷ் பெல்கிரேட்(30) ஆகியோர் கடந்த ஏப்ரல் மாதம் 16ஆம் தேதி இறுதிச் சடங்கில் கலந்து கொள்வதற்காக பல்கர் மாவட்டத்திற்கு அருகில் சென்றனர். ஊரடங்கு காலத்தில் மாவட்டத்திற்குள் நுழைந்ததால், அவர்கள் வழிப்பறி, மற்றும் கொள்ளை சம்பவத்தில் ஈடுபடவந்துள்ளதாக வதந்திகள் பரவியதாகவும், அதனால் அவர்களை கிராம மக்கள் அடித்து கொன்றதாகவும் தெரிகிறது.
இந்த சம்பவம் குறித்து ஜூலை 14ஆம் தேதியன்று மாநில குற்ற புலனாய்வுத் துறை (சிஐடி) டி.ஒய். காவல்துறை கண்காணிப்பாளர் விஜய் பவார், சுமார் 11,000 பக்கங்களைக் கொண்ட இரண்டு தனித்தனி குற்றப்பத்திரிகைகளை இரண்டு தனித்தனியான வழக்குகளில் தாக்கல் செய்தார். இரண்டு வழக்குகளிலும் 126 குற்றவாளிகளை தஹானு மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதாக அலுவலர்கள் தெரிவித்தனர்.
மாநில குற்ற புலனாய்வுத் துறை, இந்திய தண்டனைச் சட்டம், பேரிடர் மேலாண்மை சட்டம், தொற்றுநோய்கள் சட்டம், மகாராஷ்டிரா காவலர் சட்டம் மற்றும் மகாராஷ்டிரா பொது சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கும் (திருத்தம்) சட்டம், கொலை, ஆயுதக் கலவரம், அரசு ஊழியர் தனது கடமைகளைச் செய்வதைத் தடுத்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து குற்றஞ்சாட்டியுள்ளது.
கொலை சம்பவத்தில் மத ரீதியிலான எந்த காரணங்களும் இல்லை எனவும், வதந்திகள் பரவியதன் காரணமாகவே நடைபெற்றது எனவும் குற்றப்பத்திரிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வழக்கு தொடர்பாக மொத்தம் 808 பேர் மீது சந்தேகப்படுவதாகவும், 118 பேர் சாட்சிகளையும் குற்றப் புலனாய்வுத் துறையினர் விசாரணை செய்துள்ளதாக கூறுகின்றனர். இதுவரை, 154 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த வழக்கில் சம்பந்தப்பட்டதாகக் கூறப்படும் மேலும் 11 சிறுவர்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும், இவர்கள் யாரும் பிணையில் விடுவிக்கப்படவில்லை எனவும் தெரிகிறது.
இந்த வழக்கு தொடர்பான இரண்டு குற்றப்பத்திரிகைகளும் தலா 126 நபர்களின் பெயர்களை குற்றவாளிகளாக கொண்டுள்ளன. இந்த வழக்கு வரும் 28ஆம் தேதி அன்று விசாரணைக்கு வரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குற்றஞ்சாட்டப்பட்ட அனைத்து சிறுவர்களுக்கும் எதிராக போதுமான ஆதாரங்கள் இருப்பதால், சிஐடி அவர்களுக்கு தனித்தனியாக சிறார் நீதி வாரியம் முன் வழக்கு தொடர உள்ளது
விசராணைகள் முழுவதுமாக முடிக்காமல் இந்த கொலைகள் எவ்வாறு வதந்திகளின் அடிப்படையில் நடந்தது எனக் கூறமுடியும் என எதிர்க்கட்சி (பாஜக) தலைவர் ராம் கதம் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், ஏப்ரல் மாதம் 16ஆம் தேதி நடைபெற்ற சம்பவம் என்பதால், முதலமைச்சர் உத்தவ் தாக்கரே மற்றும் உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் ஆகியோர் தெரிவித்த கருத்துக்களை காவல்துறையினர் தற்போது வெளிப்படுத்துகின்றனர். இந்த வழக்கு விசாரணையை மத்திய புலனாய்வுப் பிரிவிடம் (சிபிஐ) ஒப்படைக்க வேண்டும் என்று எங்கள் கட்சி மீண்டும் வலியுறுத்துவதாக தெரிவித்தார்.