புதுச்சேரி மாநில சுகாதாரத்துறை சார்பில் இயங்கி வரும், தேசிய சுகாதார இயக்கத்தில் குறைந்தபட்ச தொகுப்பூதியத்தில் நிரந்தர ஊழியர்களுக்கு இணையாக எவ்வித சலுகைகளும் இல்லாமல் மருத்துவர், செவிலியர், சுகாதாரத் துறை செவிலியர், ரத்தப் பரிசோதகர், மற்றும் லேப் டெக்னீசியன், ஓட்டுநர்கள் போன்ற 600க்கு மேற்பட்ட ஊழியர்கள் கடந்த 15 ஆண்டுகளாக தொடர்ச்சியாக சுகாதாரத்துறையில் பணி நிரந்தரம் செய்யப்படாமல் பணியாற்றி வருகின்றனர்.
எனவே சுகாதாரத் துறையில் உள்ள காலி பணியிடங்களில் தங்களை பணி நிரந்தரம் செய்யக்கோரினர். மேலும் 2017ஆம் ஆண்டு அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்பந்த சுகாதாரத்துறை ஊழியர்களுக்கு, காலி பணியிடங்களில் 33% இடம் ஒதுக்குவது என்ற முடிவு செய்யப்பட்டது. ஆனால் இன்றுவரை அம்முடிவின் படி அரசு பணியிடங்களை நிரப்பாமல் காலதாமதம் ஏற்படுத்தி வருகிறது எனக் குற்றம்சாட்டினர்.
புதுச்சேரி சுகாதாரத்துறை இயக்க ஊழியர்கள் சங்கத்தினர், இன்று மாலை புதுச்சேரி நலவழி மற்றும் குடும்பநல இயக்குநரகம் வளாகத்தில் காத்திருப்பு போராட்டத்தை நடத்தினர். சங்க நிர்வாகி வெற்றிவேலின் தலைமையில் இப்போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் சுகாதாரத்துறை ஊழியர்கள் பலர் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனர்.
இதையும் படிங்க: ஓட்டுநர்களுக்கு பாதுகாப்பு வேண்டும் - கால் டாக்ஸி ஓட்டுநர்கள் மனு