கோவிட்- 19 தொற்றுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கும் முயற்சியில் இந்தியா இறங்கியிருந்தாலும், இந்திய மருந்து ஒழுங்குமுறை நடைமுறையை சீர்திருத்த, வல்லுனர்கள் அடங்கிய உயர் மட்ட குழுவை மத்திய அரசு ஏற்படுத்தியுள்ளது.
மருத்துவத் துறை, உயிரி தொழில்நுட்பவியல், இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்தின் வல்லுனர்கள், எய்மஸின் பிரதிநிதிகள் ஆகியோர் இந்தக் குழுவில் அங்கம் வகிக்கின்றனர். ராஜேஷ் பூஷன் தலைமையில் அமைந்துள்ள இந்தக் குழுவானது, தற்போதுள்ள மருந்து ஒழுங்குமுறை நடைமுறையை ஆய்வு செய்து, சீர்திருத்தங்களுக்கான ஆலோசனையை வழங்கும்.
மருந்து ஒழுங்குமுறை நடைமுறையில் மேற்கொள்ளப்படவிருக்கிற சீர்திருத்தம், உலகளவிலுள்ள சிறந்த நடைமுறைகளை உள்ளடக்கியும், உள்நாட்டுத் தேவைகளை பிரதிபலிக்கும் வகையிலும் இருக்கும் என சுகாதாரத் துறை உயர் அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.
மருந்துகள், ஆராய்ச்சி, தடுப்பூசி மேம்பாட்டுக்கு ஒப்புதல் அளிப்பதில் கால தாமதம் இருப்பதாக தொடர்ச்சியான அறிக்கை வெளியானதைத் தொடர்ந்து மத்திய அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
இந்தியாவில் கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 1,25,101ஆகவும், தற்போது சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 51,783ஆகவும் உள்ளது. இதுவரை 28 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. கடைசி 24 மணி நேரத்தில் மகாராஷ்டிராவில் 2020 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
இடம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்குவதற்கு முகாம்கள் அமைக்க மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. தன்னார்வலர்களைக் கொண்டு முகாம்களில் தங்க வைக்கப்படும் இடம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உடை, உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தரவேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளது. மேலும், இதற்கென மாநில அரசுகளுக்கு 11,092 கோடி ரூபாயை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது.
இதையும் படிங்க: சட்டப்பூர்வ வழக்காக மாறிய சுப்ரமணியன் சுவாமி பேச்சு