கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், வைரஸ் தொற்று அறிகுறி உள்ளவர்களை எவ்வாறு கையாள்வது என்பது குறித்து, மத்திய சுகாதார அமைச்சகத்தால் ஏப்ரல் 7ஆம் தேதி வெளியிடப்பட்ட வழிகாட்டுதல் நெறிமுறையுடன் கூடுதலாக இந்த வழிகாட்டுதல்களும் இணைக்கப்பட்டுள்ளன.
கரோனா வைரஸ் அறிகுறியுள்ளவர்கள், சுய-தனிமைப்படுத்தலுக்குத் தேவையான வசதியைக் கொண்டிருந்தால், அவர்கள் வீட்டிலேயே தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்ளலாம் என சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
யார் யார் வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ளலாம்:
- கரோனா தொற்று அறிகுறி உள்ளதாக மருத்துவரால் சான்றளிக்கப்பட்ட நபர், தன்னை தனிமைப்படுத்திக்கொள்ளும் அளவிற்கு தேவையான வசதிகள் அவரது வீட்டில் இருக்க வேண்டும். அவ்வாறு வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டிருப்பவரை கண்காணித்துக்கொள்ள ஒரு பராமரிப்பாளர் இருக்க வேண்டும், அந்த பராமரிப்பாளருக்கும் மருத்துவமனைக்கும் இடையே தொடர்பு இருப்பது அவசியமாகும்.
- சிகிச்சை அளிப்பவர், தொற்று அறிகுறியுள்ளவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள் மருத்துவ அலுவலரால் பரிந்துரைக்கப்பட்ட ஹைட்ராக்ஸி குளோரோகுயின் ப்ரோபிலாக்ஸிஸை எடுத்துக் கொள்ள வேண்டும்
- ஆரோக்கிய சேது ஆப் மொபைலில் பதிவிறக்கம் செய்யப்பட்டு, அதனை எல்லா நேரங்களிலும் செயலில் வைத்திருக்க வேண்டும்
- நோயாளி தனது உடல்நிலையை கண்காணிக்க ஒப்புக்கொள்வதோடு, அவரது உடல்நிலை குறித்த தகவலை மாவட்ட கண்காணிப்பு அலுவலரிடம் தவறாமல் தெரிவிக்கவேண்டும்.
- வீட்டில் தனிமைப்படுத்திக்கொள்வோர் மத்திய சுகாதாரத்துறை அமைச்சம் வழங்கிவுள்ள வழிகாட்டுதல்களை பின்பற்ற வேண்டும்.
எப்போது மருத்துவ சிகிச்சை பெற வேண்டும்
கடுமையான அறிகுறிகள் அல்லது சதாரண அறிகுறிகள் தோன்றினால் உடனடியாக மருத்துவ சிகிச்சை பெற வேண்டும்.
- சுவாசிப்பதில் சிரமம்
- மார்பில் தொடர்ந்து வலி அல்லது அழுத்தம்
- மன குழப்பம்
- உதடுகள் அல்லது முகத்தின் நீல நிறமாற்றங்கள் உள்ளிட்டவை தென்ப்பட்டால் மருத்துவ சிகிச்சை பெற வேண்டும்.
அறிகுறிகள் உள்ள நபர் முழுமையாக குணமடைந்துவிட்டார் என மருத்துவ பரிசோதனை முடிவுக்குப்பின் சான்றளிக்கப்பட்டால், அவர் தனது வீட்டு தனிமைப்படுத்தலை முடித்துக்கொள்ளலாம்.
தனிமைப்படுத்தப்பட்டோரை கவனித்துக்கொள்பவர்களுக்கான வழிமுறைகள்:
முக கவசம்:
- தனிமைப்படுத்தப்பட்ட நபருடன் ஒரே அறையில் இருக்கும்போது, பராமரிப்பாளர் மூன்று அடுக்குள்ள மருத்துவ முகக் கவசத்தை சரியான முறையில் அணிய வேண்டும்.
- முகக் கவசம் அணிந்து இருக்கும்போது அதன் முன் பகுதியை தொடக்கூடாது.
- முகக் கவசம் ஈரப்பதமாகவோ, அழுக்காகவோ இருந்தால், அதனை உடனடியாக மாற்ற வேண்டும்.
- பயன்பாட்டிற்குப் பிறகு முகக் கவசத்தை அகற்றிப் பின் கைகளை நன்கு கழுவ வேண்டும்.
- பராமரிப்பாளர் தனது முகம், மூக்கு, வாயைத் தொடுவதைத் தவிர்க்க வேண்டும்.
சுத்தமாக வைத்துக்கொள்வது:
- கரோனா வைரஸ் அறிகுறியுள்ள நபருடன் தொடர்பு கொள்ளும்போது கைகளை நன்கு கழுவ வேண்டும்.
- உணவு தயாரிப்பதற்கு முன்னும் பின்னும், சாப்பிடுவதற்கு முன்பு, கழிப்பறையைப் பயன்படுத்திய பின்னும் கைகளை கழுவ வேண்டும்.
- குறைந்தது 40 விநாடிகளுக்கு சோப்பு பயன்படுத்தி கை கழுவ வேண்டும்.
- கைகளைக் கழுவிய பின் கைகளை துடைக்க சுத்தமான துணி துண்டுகளைப் பயன்படுத்துங்கள், அவை ஈரமாகும்போது அவற்றை மாற்ற வேண்டும்.
- வைரஸ் தொற்று அறிகுறி உள்ளவர்களின் உடல் திரவங்கள், எச்சில் போன்றவற்றை தொட வேண்டாம்.
- தனிமைப்படுத்தப்பட்டிருப்போரை கையாளும்போது கையுறைகளைப் பயன்படுத்துங்கள். கையுறைகளை அகற்றி பின் கைகளை நன்கு கழுவ வேண்டும்.
- தனிமைப்படுத்தப்பட்டிருப்பவருக்கு அவரது அறையில் உணவு வழங்கப்பட வேண்டும்.
- அவர் பயன்படுத்தும் பாத்திரங்கள் மற்றும் உணவுகளை கையுறைகள் அணிந்து சோப்பு தண்ணீர் மூலம் சுத்தம் செய்ய வேண்டும். பாத்திரங்கள் மற்றும் உணவுகள் மீண்டும் பயன்படுத்தப்படலாம்.
- வைரஸ் அறிகுறியுள்ளவர் பயன்படுத்திய பொருள்களை சுத்தம் செய்யும்போது அல்லது கையாளும் போது மூன்று அடுக்கு மருத்துவ முகக் கவசம், கையுறைகளைப் பயன்படுத்துங்கள்.
- தனிமைப்படுத்தப்பட்டவருக்கு பரிந்துரைக்கப்பட்ட சிகிச்சையைப் பின்பற்றுவதை பராமரிப்பாளர் உறுதி செய்ய வேண்டும்.
- தனிமைப்படுத்தப்பட்டவரை கவனித்துக்கொள்பவர் தனது உடல் வெப்பநிலையை தினசரி கண்காணித்து, தனக்கு ஏதேனும் வைரஸ் தொற்று அறிகுறி இருத்தால் முறையாக மருத்துவ அலுவலரிடம் தெரிவிக்க வேண்டும்.
தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கான வழிமுறைகள்
- கரோனா வைரஸ் தொற்று அறிகுறி உள்ளவர்கள் எல்லா நேரங்களிலும் மூன்று அடுக்கு மருத்துவ முகக் கவசத்தைப் பயன்படுத்த வேண்டும்.
- எட்டு மணிநேர பயன்பாட்டிற்குப் பிறகு அல்லது அதற்கு முன்னர் அவை ஈரமாகிவிட்டால் முகக் கவசத்தை அகற்றிவிட வேண்டும்.
- தனிமைப்படுத்தப்பட்ட நபர் வீட்டிலுள்ள மற்றவர்களிடமிருந்து விலகி இருக்க வேண்டும்.
- உடலில் நீரேற்றத்தை பராமரிக்க நிறைய திரவங்களை குடிக்க வேண்டும்.
- கைகளை சோப்பு மூலம் குறைந்தது 40 விநாடிகள் கழுவ வேண்டும் அல்லது ஆல்கஹால் கலந்த சானிட்டைசர் மூலம் சுத்தம் செய்ய வேண்டும்.
- தான் பயன்படுத்திய பொருள்களை மற்றவர்களுடன் பகிர வேண்டாம்.
- 1% ஹைபோகுளோரைட் கரைசலுடன் கலந்த நீரால் அடிக்கடி தனிமைப்படுத்தப்பட்டவர் பயன்படுத்திய பொருள்களை (டேப்லெட்டுகள், கதவு கைப்பிடிகள், கைப்பிடிகள் போன்றவை) சுத்தம் செய்ய வேண்டும்.
- மருத்துவரின் அறிவுறுத்தல்கள் மற்றும் மருந்து ஆலோசனைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்.
- தினசரி வெப்பநிலை கண்காணிப்பு மூலம் தனது உடல்நிலையை சுயமாக கண்காணிக்க வேண்டும்
இதையும் பார்க்க: இரு வாரங்களுக்குப் பிறகு ஏர் இந்தியா விமானம் செயல்பட வாய்ப்பு!