நாட்டில் கரோனா வைரஸ் பாதிப்பு அதிகளவில் உள்ளது. வைரஸ் தடுப்பு பணியில் மத்திய மாநில அரசுகள் தீவிரமாக களமிறங்கியுள்ளனர்.
இதுவரை கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 16 லட்சத்து 38 ஆயிரத்து 870ஆக அதிகரித்துள்ளது.
உயிரிழந்தோரின் எண்ணிக்கை 35 ஆயிரத்து 779ஆக உயர்ந்துள்ளது. கடந்த இரண்டு நாள்களில் மட்டும் 50 ஆயிரத்திற்கும் அதிகமான வழக்குகள் பதிவாகியுள்ளன.
மேலும், 1 கோடியே 88 லட்சம் மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில், நாட்டில் வேகமாக பரவும் கரோனா தொற்றை கருத்தில் கொண்டு, மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் காணொலி காட்சி வழியாக ஆலோசனை கூட்டம் ஒன்றை நடத்தினார்.
அதில், வைரஸ் தடுப்பு பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்தக் கூட்டத்தில் வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி ஆகியோர் கலந்து கொண்டனர்.