ஹத்ராஸ் விவகாரம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திவரும் நிலையில், இதுகுறித்து அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் லக்னோ கிளையில் நாளை விசாரணை நடைபெறவுள்ளது. பாதிக்கப்பட்ட பெண்ணின் உடலை பெற்றோருக்கு அளிக்காமல் காவல் துறையினர் தகனம் செய்தது குறித்த தங்கள் வாக்குமூலத்தை குடும்பத்தினர் நீதிமன்றத்தில் அளிக்கவுள்ளனர்.
முன்னதாக, இந்த விவகாரத்தை அலகாபாத் உயர் நீதிமன்றம் தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக்கொண்டது. இதனிடையே, செய்தியாளர்களை சந்தித்த பாதிக்கப்பட்ட பெண்ணின் மூத்த சகோதரர், "என்னுடைய தந்தை, தாய், சகோதரி, தம்பி என குடும்பத்தில் உள்ள ஐவர் நீதிமன்றத்தில் ஆஜராக உள்ளோம். லக்னோவுக்கு செல்லும்போது முழு பாதுகாப்பு அளிக்கப்படும் என நிர்வாகம் உறுதி அளித்துள்ளது" என தெரிவித்தார்.
ஹத்ராஸ் பெண்ணின் குடும்பத்தாருக்கு தேவையான அனைத்து உதவிகளையும் நீதிமன்றத்திற்கு அவர்களை பாதுகாப்பாக அழைத்துச் செல்ல வேண்டும் என அலகாபாத் உயர் நீதிமன்றம் தெரிவித்திருந்தது. உடல் தகனம் செய்யப்பட்டதில் உரிமை மீறல் நடைபெற்றுள்ளதா என்பது குறித்து நீதிமன்றம் விசாரிக்கவுள்ளது.
உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் உள்ள ஹத்ராஸ் என்ற கிராமத்தில் 19 வயது மதிக்கத்தக்க தலித் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, முதுகெலும்பு உடைக்கப்பட்டு கொடூரமான முறையில் தாக்கப்பட்டு ரத்த வெள்ளத்தில் சாலையில் கிடந்தார். அவர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்த நிலையில், கடந்த 29ஆம் தேதி உயிரிழந்தார்.
இதையடுத்து உயிரிழந்த பெண்ணின் உடலை பெற்றோரிடம் ஒப்படைக்காமல் காவல் துறையினரே தகனம் செய்ததால் இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அப்பெண்ணுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்றும், குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை வழங்க வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகள், பல்வேறு அரசியல் தலைவர்கள் பொதுமக்கள் வலியுறுத்திவருகின்றனர்.