ஹரியானா சட்டப்பேரவை முடிவுகள் ஆளும் பாரதிய ஜனதா தரப்புக்கு உள்ளூர அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கும் என்பதில் சந்தேகமில்லை. பூகோள ரீதியாக பார்க்கும்போது, மாநிலத்தின் வடக்கு, மத்திய, தெற்குப் பகுதிகளில் வசித்த மக்கள் பாரதிய ஜனதாவுக்கு ஆதரவு கொடுக்கவில்லை. ஆக அப்பகுதியில் ஜாட் சமூக மக்கள் மட்டுமின்றி, மற்ற சமூக மக்களிடமும் பாரதிய ஜனதா தனது ஆதரவை இழந்துள்ளது.
கடந்த தேர்தலின்போது, பாரதிய ஜனதா சார்பில், ஜாட் சமூகத்தைச் சேர்ந்த 24 பேருக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டது. அது இந்த முறை, 20 ஆக குறைக்கப்பட்டது. ஜாட் சமூக மக்களின் இடஒதுக்கீடு போராட்டம், பொதுவான பிரச்னை இதற்கு முக்கியக் காரணியாகப் பார்க்கப்படுகிறது.
முதலமைச்சர் மனோகர்லால் கட்டாரின் சொந்த மாவட்டமான கர்ணலிலும் பாரதிய ஜனதா சோபிக்கவில்லை. பாரதிய ஜனதா கட்சியிலிருந்து விலகி காங்கிரசில் இணைந்த நிலோகேரி, அசந்த் தொகுதியில் வெற்றிபெற்றார். சோன்பட், ரோதக், ஜிந்த், ஜாஜர் மாவட்டங்களில் பாரதிய ஜனதா மூன்று தொகுதிகளை தன்வசமாக்கியது.
கடந்த ஆண்டு இது ஐந்து தொகுதியாக இருந்தது. பாரதிய ஜனதாவுக்கு கைகொடுத்த பகுதிகள் என்று பார்த்தோமேயானால் குர்கான், ரேவாரி, மகேந்திரகார்க், பரிதாபாத், பல்வால், மேவாத், பிவானி, சார்கி தாத்ரி ஆகிய மாவட்டங்கள்தான்.
இப்பகுதியில் கடந்த தேர்தலில் 28 தொகுதிகளை கைப்பற்றிய பாரதிய ஜனதா இந்த முறை 26 தொகுதிகளில் வெற்றிபெற்றிருந்தது. ஹிசார், பேத்ஹாபாத், சிர்சா ஆகிய மாவட்டங்களில் மட்டும் பாரதிய ஜனதா ஐந்து தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்தது. கடந்த முறை இப்பகுதிகளில் மூன்று இடங்கள் மட்டுமே பாரதிய ஜனதா வென்றிருந்தது. இடஒதுக்கீடு கோரி ஜாட் சமூக மக்கள் ஒருங்கிணைத்து நடத்திய போராட்டத்தை மாநில அரசு சரியாகக் கையாளவில்லை.
அந்தப் போராட்டம் வன்முறையில் முடிந்தது. இதுவே ஜாட் சமூக மக்களின் அக்கினி பார்வை பா.ஜனதா மீது திரும்பக் காரணம். மேலும் நாடு முழுவதுமுள்ள பொருளாதார மந்தநிலை, வேலைவாய்ப்பின்மையும் ஒரு காரணம்.
ஹரியானாவில் ஜாட் சமூகத்தினர் 27 விழுக்காடு உள்ளனர். 37 தொகுதிகளில் வெற்றியை நிர்ணயிக்கும் வாக்காளர்கள் இவர்கள்தான். இந்த முறை இவர்களின் வாக்கு காங்கிரஸ் கட்சிக்கும் ஜனநாயக ஜனதா கட்சிக்கும் கிடைத்துள்ளது. பாரதிய ஜனதாவின் இந்த எதிர்பாராத சரிவுக்கு அவர்களின் அதீத நம்பிக்கை, வேட்பாளர்கள் தேர்வில் சொதப்பல் உள்ளிட்ட காரணங்கள் முதன்மையாக இருக்கின்றன என்று அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
இதையும் படிங்க: ஹரியானாவில் ஆட்சியமைக்க உரிமை கோர பாஜக முடிவு?