மகாராஷ்டிரா, ஹரியானா ஆகிய இரு மாநிலங்களின் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று காலை 7 மணிக்குத் தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெற்றது.
288 தொகுதிகளைக் கொண்ட மகாராஷ்டிராவில், சுமார் 8.9 கோடி வாக்காளர்களுக்காக 96,661 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. சுமார் 6.5 லட்சம் ஊழியர்கள் தேர்தல் பணியில் ஈடுபட்டனர். நேற்று மாலை 6 மணி நிலவரப்படி, 60 விழுக்காடு வாக்குகள் பதிவானதாக தேர்தல் அலுவலர்கள் தெரிவித்தனர்.
90 தொகுதிகளைக் கொண்ட ஹரியானாவில், மொத்தமுள்ள 1.83 கோடி வாக்காளர்களுக்காக 19,578 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. மாநிலம் முழுவதும் சுமார் 75,000 வீரர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். மாலை 6 மணி நிலவரப்படி, சுமார் 65 விழுக்காடு வாக்குகள் பதிவானதாகத் தேர்தல் அலுவலர்கள் தெரிவித்தனர். கடந்த தேர்தலில் இங்கு 76.54 விழுக்காடு வாக்குகள் பதிவாகியிருந்த நிலையில், இந்த தேர்தலில் வாக்குப்பதிவு குறைந்துள்ளது.