டெல்லியில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் 40 நாள்களுக்கும் மேலாக போராடி வருகின்றனர். இந்நிலையில், ஹரியானா முதலமைச்சர் மனோகர்லால் கட்டார், கர்னால் மாவட்டம் கைமலா கிராமத்தில் கிஷான் மகா பஞ்சாய்த்து நிகழ்ச்சியை நடத்துவதாக அறிவித்திருந்தார். இதில், வேளாண் சட்டங்களின் நன்மைகளை எடுத்துரைக்க திட்டமிட்டிருந்ததாக கூறப்படுகிறது.
இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த விவசாயிகள், நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்குள் புகுந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். காவல் துறையின் தடுப்பை தாண்டி, மேடையில் வைக்கப்பட்டிருந்த பூந்தோட்டி, மேஜை, டேபிள், நாற்காலி ஆகியவற்றை அடித்து நொறுக்கினர். முதலமைச்சரின் ஹெலிகாப்டர் தரையிறங்கும் இடத்தில் நூற்றுக்கணக்கானோர் குவிந்ததையடுத்து, முதலமைச்சரின் வருகை ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து காவல் துறையினர், போராட்டக்காரர்களை நோக்கி கண்ணீர்புகை குண்டுகள் வீசியும், தண்ணீர் பீய்ச்சி அடித்தும் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இதுகுறித்து முதலமைச்சர் கூறுகையில், நான் வந்து பேசுவதற்காக சுமார் 5,000 பேர் காத்திருந்தனர், ஆனால், அது நடக்கவில்லை. ஆர்ப்பாட்டங்களை கருத்தில் கொண்டு, சட்டம் ஒழுங்கு நிலைமையை மோசமாக்க நான் விரும்பாததால், திரும்பி வர முடிவு செய்தேன் என்றார்.