இந்தியாவில் தயாரிக்கப்படும் கரோனா தடுப்பூசிக்கு விரைவில் மத்திய அரசு ஒப்புதல் வழங்கவுள்ள நிலையில், தடுப்பூசி பயன்பாட்டிற்கு வந்தால் அதனை பொதுமக்களுக்கு எவ்வாறு அளிப்பது என நாடு முழுவதும் ஒத்திகை பார்க்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அந்த ஒரு பகுதியாக, டெல்லி குரு தேக் பகதூர் மருத்துவமனையில் கரோனா தடுப்பூசி ஒத்திகை நடைபெற்றுவருகிறது. அதை மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் இன்று (ஜன.2) நேரில் ஆய்வுசெய்தார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப்பேசிய அவர்,“ கோவிட் -19 தடுப்பூசி குறித்து பரப்பப்பட்டுவரும் வதந்திகளுக்கு செவிசாய்க்க வேண்டாமென மக்களிடம் நான் வேண்டுகோள் விடுக்கின்றேன். தடுப்பூசியின் பாதுகாப்பு மற்றும் செயல்திறனை உறுதி செய்வது எங்கள் கடமை, அதற்கு நாங்கள் முன்னுரிமை அளித்துள்ளோம். போலியோ நோய்த்தடுப்பு மருந்துகளின் போது பல்வேறு வகையான வதந்திகள் பரவின. ஆனால், மக்கள் தடுப்பூசியை எடுத்துக் கொண்டனர். இந்தியா இப்போது போலியோ இல்லாத நாடாக திகழ்கிறது.
கரோனா வைரஸ் தடுப்பூசி விநியோகத்தின் முதல் கட்டத்தில் அனைவருக்கும் விலையில்லாமல் வழங்கப்படும். முதல் கட்ட தடுப்பூசி வழங்கலில் ஒரு கோடி சுகாதார ஊழியர்களுக்கும், இரண்டு கோடி முன்னணிப் பணியாளர்களுக்கும் முன்னுரிமை அளிக்கப்படும். 27 கோடி பயனாளிகளுக்கு இந்த தடுப்பூசி போடப்படும். ஜனவரியில் தொடங்கும் இந்த தடுப்பூசி வழங்கல் ஜூலை இறுதி வரை தொடரும்.
டெல்லியில் குரு தேக் பகதூர் அரசு மருத்துவமனை, தரியகஞ்ச் ஆரம்ப சுகாதார மையம், வெங்கடேஸ்வரா தனியார் மருத்துவமனை ஆகிய மூன்று இடங்களில் தடுப்பூசி தடுப்பு ஒத்திகை நடைபெற்று வருகிறது.
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் காமாட்சிபல்யாவில் உள்ள ஆரம்ப சுகாதார மையத்தில் தடுப்பூசி தடுப்பு ஒத்திகை நடைபெற்று வருகிறது. அங்கு ஒரு லட்சத்து 65 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுகாதார ஊழியர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதேபோல, மகாராஷ்டிரா மாநிலம் புனேயில் தடுப்பூசி ஒத்திகை நடைபெற்று வருகிறது. நாடு முழுவதுமுள்ள 116 மாவட்டங்களில் 259 இடங்களில் இன்று முதல் தடுப்பூசி ஒத்திகை மேற்கொள்ளப்படுகிறது.
தடுப்பூசியைப் போட்டுக் கொள்பவர்களின் உடல் வெப்பமும், ஆக்சிஜன் அளவும் பரிசோதிக்கப்பட்டது. பின்னர் அவர்களிடம் ஆதார் அட்டையுடன், பான் கார்டு, வங்கிக் கணக்கு புத்தகம், குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை என உள்ளிட்ட அடையாள அட்டைகளில் இரண்டு ஆதாரங்கள் வாங்கப்படும். பின்னர், கரோனா தடுப்பூசி போடும் பயனாளிகளின் விபரம் கணினி மூலம் கோவிட் 19 செயலியில் பதிவு செய்யப்படுகிறது.
தடுப்பூசி ஒத்திகை பயனாளிகள், அரை மணி நேரம் மருத்துவர்கள் கண்காணிப்பில் அனுமதிக்கப்பட்டு கண்காணிக்கப்படுகின்றனர். அவர்களுக்கு எந்தவொரு பக்க விளைவும் ஏற்படவில்லை என்றால், அவர்கள் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்படுவர். கரோனா தடுப்பூசி போடும் போது அதில் வரக்கூடிய சிரமங்களை முன்கூட்டியே அறிந்து அதனை சரி செய்ய இந்த தடுப்பூசி ஒத்திகை நடைபெற்று வருகிறது.
ஒத்திகை நடத்தப்படும் மாநிலங்களில் இருந்து சுகாதாரத்துறை மூலமாக பெறப்படும் கருத்துகள் (பின்னூட்டங்கள்) தடுப்பூசிக்கான வழிகாட்டுதல்களில் சேர்க்கப்படும்” என்றார்.
நாட்டு மக்கள் அனைவரிடமும் தடுப்பூசியைக் கொண்டு சேர்க்கும் சாத்தியத்தை மதிப்பிடவும், திட்டமிடலை மேலும் செழுமைப்படுத்தவும், சவால்களை அடையாளம் காணவும் இந்த ஒத்திகை பெருமளவில் உதவும் என சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் நம்புகிறது.
இதையும் படிங்க : புதுச்சேரியில் கரோனா தடுப்பூசி ஒத்திகை - முதலமைச்சர் ஆய்வு