இந்திய செஞ்சிலுவைச் சங்கம் உருவாக்கியுள்ள ‘மின்னணு ரத்த சேவைகள்’ கைபேசிச் செயலியை, மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன்காணொலிக் காட்சி மூலம் தொடங்கிவைத்தார்.
பிரதமர் நரேந்திரமோடி, 2015ஆம் ஆண்டு தொடங்கிவைத்த ‘டிஜிட்டல் இந்தியா’ திட்டத்தின் கீழ் செயல்படும் அதிநவீன கணக்கீட்டு மேம்பாட்டு மையத்தைச் சேர்ந்த இ-ரக்டோஷ் குழுவினரால் இந்த செயலி உருவாக்கப்பட்டுள்ளது. ரத்தம் தேவைப்படுபவர்கள், இந்த செயலியில் பதிவு செய்தால், செஞ்சிலுவை சங்கத்தின் எந்ததெந்த ரத்த வங்கிகளில் ரத்தம் கிடைக்கும் என்ற தகவலை செயலி வழங்கும். செயலி வாயிலாக நான்கு யூனிட் ரத்தம் வரை விண்ணப்பிக்கலாம்.
இந்நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் ஹர்ஷ் வர்தன், “மக்கள் நலனைக் கருத்தில் கொண்டு பிரதமர் தொடங்கிவைத்த டிஜிட்டல் இந்தியா திட்டம், தற்போது ஒவ்வொருவரின் அன்றாட வாழ்விலும் ஒருங்கிணைந்த அங்கமாக மாறிவிட்டது. ரத்த தானத்திற்கான இந்தச் செயலி, ரத்ததான சேவைகளைப் பூர்த்தி செய்வதில் டிஜிட்டல் இந்தியா திட்டம் எந்த அளவிற்கு பயன்படுகிறது என்பதற்கு மிகச்சிறந்த உதாரணம்.
பலரது குடும்பத்தில் நிலவும் மருத்துவச் சூழல் காரணமாக, ரத்த தானம் குறித்த சேவைகள் அவர்களுக்கு அவ்வப்போது தேவைப்படுகிறது. இந்தச் செயலி மூலம், ஒரு ரத்த வங்கியில் இருந்து ஒரே நேரத்தில் 4 யூனிட் ரத்தம் கோரி பதிவு செய்வதுடன், 12 மணி நேரம் காத்திருந்தால் ரத்தத்தைப் பெற்றுக் கொள்ளலாம். இந்திய செஞ்சிலுவைச் சங்க தேசிய தலைமையகத்தில், ரத்தம் கோரி பதிவு செய்வதை இந்தச் செயலி எளிதாக்குகிறது” என்று அவர் குறிப்பிட்டார்.
நாடு பெருந்தொற்றை எதிர்கொண்டு வரும் நேரத்தில், நேரடியாக ரத்தம் தேவைப்படுவோரின் தேவைகளைப் பூர்த்தி செய்ய, இந்த செயலி உதவும் என்றும் அவர் குறிப்பிட்டார். கோவிட்-19 பெருந்தொற்று காலத்தில், தாமாக முன்வந்து ரத்த தானம் செய்தவர்கள் அனைவருக்கும் அவர் பாராட்டுகளைத் தெரிவித்தார்.