காந்திநகர்: நாடு முழுவதும் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தைத் தாண்டியுள்ளது. குஜராத்தில் இதுவரை கோவிட்-19ஆல் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் இறப்பு விகிதம் அதிகரித்துள்ளது எனத் தெரியவந்துள்ளது.
அதிக எண்ணிக்கையிலான கோவிட்-19 இறப்புகள் ஆரம்பத்தில் மகாராஷ்டிராவில் 2.849 விழுக்காடாக பதிவாகியிருந்தன. இருப்பினும் தற்போது அது 3.55 விழுக்காடாக உள்ளது. மகாராஷ்டிராவுடன் ஒப்பிடும்போது குஜராத்தில் கோவிட்-19 நோயாளிகள் குறைவாக இருந்தாலும், இறப்பு விகிதம் 6.22 விழுக்காடு என்ற அடிப்படையில் உள்ளதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
மே 30 முதல் ஜூன் 5 வரையிலான கால இடைவெளியில், குஜராத்தில் மொத்தம் 3,175 புதிய கோவிட்-19 நோயாளிகள் கண்டறியப்பட்டுள்ளனர். அதே நேரத்தில் 210 நோயாளிகள் இறந்துள்ளனர். மேலும், மாநில அரசின் சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ஜூன் 5 வரையிலான காலகட்டத்தில், குஜராத்தில் கரோனா மீட்பு விகிதம் 68.05 விழுக்காடாக இருந்தது.
குஜராத்தில் கரோனா நோயாளிகளின் இறப்பு விகிதம் உயர்ந்து வருவதால், அம்மாநில சுகாதாரத் துறையின் தரம் குறித்த கேள்விகள் எழுகின்றன. அகமதாபாத் அரசு மருத்துவமனையில் கரோனா சிறப்புப் பிரிவில் 1,200 படுக்கைகளுக்கு 180 செயற்கை சுவாசக் கருவிகள் மட்டுமே இருந்தன. ஆனால், இறப்புகள் அதிகரித்ததை அடுத்து, கூடுதலாக 40 செயற்கை சுவாசக் கருவிகள் சேர்க்கப்பட்டன. தற்போது மொத்த எண்ணிக்கை 220 ஆக உள்ளது என்று அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
ஜூன் 5 ஆம் தேதி, 510 புதிய கரோனா நோயாளிகள் கண்டறியப்பட்டுள்ளனர். தற்போது பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 19ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. இதுவரை 1,190 கரோனா நோயாளிகள் சிகிச்சைப் பலனளிக்காமல் இறந்துள்ளனர். அகமதாபாத்தில் மட்டும் 13 ஆயிரத்து 678 கோவிட்-19 நோயாளிகளாகப் பதிவு செய்யப்பட்டுள்ளனர்; இதில் 968 பேர் இறந்துள்ளனர்.