குஜராத் மாநிலத்தின் அரசு பேருந்து ஒன்று, ஜுனகத்திலிருந்து ஜாம்நகர் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் சரியாக மாலை ஆறு மணியளவில் பேருந்து விஜர்கி கிராமத்தைக் கடந்து சென்ற சமயத்தில், பேருந்தில் பயணித்த ஹிதேஷ் பாண்ட்யா என்பவருக்கும், முன் இருக்கையில் அமர்ந்திருந்தவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றி, முன் இருக்கையில் இருந்த நபர் பையிலிருந்த கத்தியை எடுத்து கண் இமைக்கும் நேரத்தில் பாண்ட்யாவை குத்தியுள்ளார். இதில், பாண்ட்யா ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலே உயிரிழந்தார். திடீரென அரங்கேறிய இந்தக் கொலையால் திகைத்து நின்ற சக பயணிகள், உடனடியாக குற்றவாளியின் கைகளை கயிற்றால் கட்டிவிட்டு காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
காவல் துறையினர் பேருந்தை எஏதேனும் அருகிலுள்ள ஹோட்டலில் நிறுத்துமாறு அறிவுறுத்தியதைத் தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் பாண்ட்யாவின் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்தனர். மேலும், பேருந்தில் சென்ற அனைத்துப் பயணிகளிடமும் விசாரணை நடத்தினர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், கொலையாளியிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.