நாட்டில் கரோனா வைரஸ் பாதிப்பு தீவிரமடைந்து வருகிறது. மகாராஷ்டிரா, குஜராத், ராஜஸ்தான், உத்தரப்பிரதேம், டெல்லி, தமிழ்நாடு, ஆந்திரப்பிரதேசம், தெலங்கானா ஆகிய மாநிலங்களில் பாதிப்பு அதிகமாக உள்ளது.
குறிப்பாக, பிரதமர் நரேந்திர மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில் கரோனாவால் உயிரிழப்பு விகிதம் மற்ற மாநிலங்களை விட சற்று கூடுதலாகவே உள்ளது.
இந்நிலையில், இதற்கான காரணத்தைக் கண்டறிய ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்து வருவதாக அம்மாநில சுகாதாரத்துறை முதன்மை செயலர் ஜயந்தி ரவி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து காணொலி மூலம் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "குஜராத்தில் கோவிட்-19 நோயால் குணமடைபவர்களின் எண்ணிக்கை மற்ற மாநிலங்களை விட சற்று குறைவாகவே உள்ளது. அதுபோல, உயிரிழப்பு எண்ணிக்கையும் தேசிய உயிரிழப்பு விகிதத்தை விட அதிகமாக உள்ளது.
இதுகுறித்து நிபுணர்களிடம் கேட்டபொழுது கேட்விட்-19 நோயை ஏற்படுத்தும் SARS-COV-2 (கரோனா வைரஸ்) 'L', 'S' என இரு வேறு வகைகளாகப் பிரிக்கப்படுவதாகவும் இதில் 'S' வகை வைரஸை விட, L வகைக்குக் கூடுதல் வீரியம் உள்ளது எனவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
இதுவே குஜராத்தில் அதிக உயிரிழப்பு நேர்வதற்குக் காரணமாக இருக்கலாம் என்றும் அவர்கள் கூறுகின்றனர்.
ஆனால் இதனை உறுதி செய்ய குஜராத் உயிரித் தொழில்நுட்பவியல் ஆராய்ச்சி மையத்தில் (Gujarat Biotechnology Research Centre) ஆராய்ச்சி நடைபெற்று வருகிறது" என்றார்.
இதையும் படிங்க : பணியில் இருக்கும் பத்திரிகையாளர்கள் இறந்தால் ரூ.15 லட்சம் இழப்பீடு - ஒடிசா அரசு அறிவிப்பு