ஒரு சிலர் வீட்டில் இருந்த பெற்றோர்களை விரட்டிவிடும் இந்த காலத்தில், அப்படி விரட்டிவிடும் முதியவர்கள் என்ன செய்வது என தெரியாமல் பிச்சை எடுக்க அவமானப்பட்டு, சாகவும் பயப்பட்டு, பசியுடன் சாலையில் படுத்து காலத்தை ஓட்டுகின்றனர். ஆனால் பசி அவமானத்தை வென்று பசிக்கொடுமை தாங்காமல் அவர்கள் பிச்சையெடுக்க ஆரம்பிக்கின்றனர்.
இதையெல்லம் மிஞ்சும் ஒரு சம்பவம் புதுவையில் நேற்று நடைபெற்றது. புதுவை குடிசை மாற்று வாரியம் அருகே நேற்று வேகமாக ஒரு கார் வந்து நின்றுள்ளது. அதில் இருந்த சிலர் சுமார் 69 வயதுடைய ஒரு முதியவரை காரிலிருந்து இறக்கி, அங்கேயே அவரை விட்டுவிட்டு வேகமாக காரை எடுத்து சென்றுனர். பார்க்க வசதியான வீட்டை சேர்ந்தவர் போல இருந்த அந்த முதியவர் எழுந்து நடக்க முயன்றபோது மயக்கத்தில் தடுமாறி விழுந்து காயமடைந்தார்.
இதனைக் கண்ட அங்கிருந்தவர்கள் இதுகுறித்து உருளையன்பேட்டை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலறிந்த சம்பவ இடத்திற்கு விரைந்த காவலர்களில் ஒருவரான மோகன், சாப்பிடாமல் பலவீனமாக விழுந்து கிடந்த அந்த முதியவரை கண்டதும் அவருக்கு சாப்பாடு வாங்கி வந்து அதனை தானே ஊட்டிவிட்டுள்ளார்.
மேலும் அவருக்கு தேவையான முதலுதவிகளை அளித்து, பின்னர் அந்த முதியவரை அரசு மருத்துவமனையில் அனுமதித்து, முதியோர் இல்லத்தில் சேர்க்க நடவடிக்கை எடுத்துள்ளார். காவலரின் இந்த செயலைக் கண்ட அங்கிருந்தவர்கள் தங்களது பாராட்டுகளை தெரிவித்துள்ளனர்.
மேலும் காவலர் மோகன், முதியவருக்கு சாப்பாடு ஊட்டிவிடும் புகைப்படமானது தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ஆட்டோ ஓட்டுநரை மிரட்டி லஞ்சம் வாங்கிய எஸ்ஐ, ஏட்டு சஸ்பெண்ட்