மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் 39ஆவது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டம் டெல்லியில் இன்று நடைபெற்றது. இதில் ஜி.எஸ்.டி தொழில்நுட்பத்தில் ஏற்பட்டுள்ள நடைமுறை சிக்கல் குறித்து தீவிர ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டன.
ஜி.எஸ்.டி வரி நாடு முழுவதும் ஒரே விதிகளின் கீழ் செயல்பட்டுவரும் நிலையில் அதற்கான மைய இணையதளமான ஜி.எஸ்.டி. நெட்வொர்க் எனப்படும் ஜி.எஸ்.டி.என். பல குளறுபடிகளைச் செய்வதாக தொழில்முனைவோர் சார்பில் தொடர்ச்சியான புகார்கள் முன்வைக்கப்படுகின்றன.
இந்த ஜி.எஸ்.டி.என் தொழில்நுட்பச் சேவைகளை இன்போசிஸ் மென்பொருள் தொழில்நுட்ப நிறுவனம் மேற்பார்வை செய்துவரும் நிலையில் இது தொடர்பானச் சிக்கல்களை அரசு அந்நிறுவனத்திடம் முன்வைத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதையடுத்து இந்தச் சிக்கல்கள் குறுகிய காலத்தில் தீர்க்கப்படும் என நிதியமைச்சகம் உறுதியளித்துள்ளதாகவும் ஆதலால் தொழில் முனைவோர் கவலை கொள்ளத் தேவையில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜி.எஸ்.டி.என். கோளாறுகளால் விவரங்கள் சரியாக பதிவு செய்வதில் சிக்கல் எழுந்து தங்களுக்கு வரி நிலுவைத் தொகை கிடைப்பதில் தாமதம் நிலவுவதாக தொழில்முனைவோர் சார்பில் பிரதான குற்றமாக முன்வைக்கப்படுகிறது.
இதையும் படிங்க: யெஸ் வங்கிக்கு மார்ச் 18இல் தடை நீக்கம்!