புதுச்சேரியில் கடந்த 2015ஆம் ஆண்டு முதல் அரசு அலுவலகங்களில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்படவில்லை. கடந்த ஐந்து ஆண்டுகளாக அரசு பணிகளுக்கான தகுதிகள் இருந்தும் அதற்கான வாய்ப்புகளை இழந்து பல பேர் காத்துள்ள நிலையில், புதுச்சேரி அரசு அலுவலகங்களில் உள்ள உதவியாளர், நல ஆய்வாளர், கிராம உதவியாளர், ஆய்வாளர் உள்ளிட்ட காலிப் பணியிடங்களில் நேரடி நியமனம் செய்து நிரப்பகோரி அம்மாநில பட்டதாரி இளைஞர்கள் பல கட்டப் போராட்டங்கள் நடத்தியுள்ளனர்.
இது தொடர்பாக முதலமைச்சரை சந்தித்து மனு அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் இன்று (செப்.19) புதுச்சேரி தலைமை தபால் நிலையம் அருகே திரண்ட அரசு பணிக்காக நீண்ட நாளாக காத்திருக்கும் பட்டதாரி இளைஞர்கள் சங்கத்தினர், அச்சங்கத் தலைவர் தியாகராஜன் தலைமையில் தபால் அனுப்பும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தபால் நிலையத்தில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் 350 பட்டதாரி இளைஞர்கள் தனித்தனியாக முதலமைச்சர், துணை நிலை ஆளுநர், தலைமைச் செயலர் ஆகியோருக்கு கடிதம் எழுதி, தபால் பெட்டியில் அக்கடிதங்களையிட்டு போராட்டம் நடத்தினர். இதில் புதுச்சேரியில் அரசு வேலைக்காக நீண்ட நாளாக காத்திருக்கும் பட்டதாரிகள் சங்கத்தைச் சேர்ந்த பலர் கலந்து கொண்டனர்.