இரண்டு நாடுகளுக்கும் திருப்புமுனையாக அமையும் வகையில் இந்திய, வங்கதேச நாடுகள் வேளாண்துறையில் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும் என மத்திய வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
இந்திய தொழில்துறை கூட்டமைப்பு சார்பில் வேளாண்துறை குறித்த இந்திய - வங்கதேச இணைய மாநாட்டில் கலந்துகொண்ட கோயல் இதுகுறித்து மேலும் கூறுகையில், "வேளாண்துறையில் இரு நாடுகளின் உறவு சமகால பொருளாதார சவால்களை எதிர்கொள்ள உதவும். பல பொருள்களின் மீது வரி விதிக்காமல் இந்தியாவில் விற்க அனுமதி வழங்கியுள்ளோம். வேளாண் ஏற்றுமதி பொருள்களுக்கு வரி விதிக்கப்படவில்லை. இத்துறையில்தான் இருநாடுகளும் அதிக ஒத்துழைப்பை வழங்கி சிறப்பாக பணியாற்ற முடியும்.
சமூக பொருளாதார ரீதியாக வேளாண்துறைக்கு பல பரிமாணங்கள் உள்ளன. வங்கதேசத்திற்கு பல வாய்ப்புகள் அளிக்கப்பட்டுள்ளன அதனை எப்படி அந்நாடு பயன்படுத்தவுள்ளது என்பதை பார்க்க வேண்டும். குறிப்பாக, பொருள்களுக்கு கட்டணம் வசூலிக்கப்படாதது அதில் மிகப்பெரிய பங்காற்ற உள்ளது" என்றார்.