காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி கடந்த சில நாள்களாக நாடு எதிர்கொண்டு வரும் பல்வேறு பிரச்னைகள் குறித்தும் பேசி காணொலிகளைப் பகிர்ந்து வருகிறார்.
குறிப்பாக, வேலைவாய்ப்பின்மை, மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பு உள்ளிட்டவை குறித்து பிரதமர் நரேந்திர மோடி தனது மௌனத்தைக் கலைக்க வேண்டும் என்றும், நாட்டின் இளைஞர்கள் வேலைவாய்ப்பு, நல்ல எதிர்காலம் ஆகியவற்றைக் கோரும் வேளையில் பிரதமர் அமைதி காத்து இளைஞர்களின் பிரச்னைகளை புறக்கணிக்கிறார் என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.
இந்நிலையில், தனது ட்விட்டர் பக்கத்தில் இன்று (செப்.12) கருத்து தெரிவித்துள்ள ராகுல் காந்தி, "மோடி தலைமையிலான மத்திய அரசு கரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்தத் தவறிவிட்டது. கரோனா வைரஸிற்கு எதிராக திட்டமிட்டு போராடுவதாகக் கூறி மோடி தலைமையிலான அரசாங்கம் இந்தியாவை படுகுழியில் தள்ளிவிட்டது.
வரலாறு காணாத அளவுக்கு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 24 சதவிகிதம் குறைவு, 12 கோடி மக்கள் வேலையிழப்பு, 15.5 லட்சம் கோடி ரூபாய் கூடுதல் கடன்கள், உலக அளவில் மிக அதிக அளவு கரோனா பாதிப்பு, இறப்பு விகிதம் ஆகியவற்றைக் கொண்டுள்ளோம்.
ஆனால் மத்திய அரசும் சில ஊடகங்களும் நாட்டில் எவ்வித பிரச்னைகளும் இல்லாதது போன்ற பிம்பத்தைக் கட்டமைத்து வருகின்றன. அவர்களுக்கு நாட்டில் அனைத்தும் நன்றாக உள்ளது போல் தெரிகிறது" எனத் தெரிவித்துள்ளார்.