நாடு முழுவதும் பொது முடக்கம் காரணமாக ஊரடங்கு அறிவிக்கப்பட்டதன் விளைவாக பெருநகரங்களில் வேலைபார்த்த லட்சக்கணக்கான குடிபெயர் தொழிலாளர்கள் தங்கள் சொந்த மாநிலங்களுக்குத் திரும்பியுள்ளனர். உரிய உணவு, உறைவிடமின்றி கால்நடையாகவே தங்களது சொந்த ஊர்களுக்குத் திரும்பும் அவலநிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டனர்.
இந்நிலையில், குடிபெயர் தொழிலாளர்களுக்காக புதிய திட்டமொன்றை மத்திய அரசு நேற்று அறிவித்துள்ளது. அதன்படி, 50 ஆயிரம் கோடி ரூபாய்க்கு 125 நாள் வேலைவாய்ப்புத் திட்டம் நாடு முழுவதும் அமல்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குடிபெயர் தொழிலாளர்கள் அதிக அளவில் ஊர் திரும்பிய 116 மாவட்டங்களில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும்.
சொந்த ஊர்களுக்குத் திரும்பியுள்ள குடிபெயர் தொழிலாளர்கள் பயன்பெறும்விதமாக, இந்தத் திறன்சார் வேலைவாய்ப்புத் திட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது. அதன்படி, வேலைவாய்ப்பு வழங்க விவசாயம், அடிப்படை உள்கட்டமைப்பு, சுகாதாரம், சிறு-குறு தொழில்கள் உள்ளிட்ட 25 வகையான பணிகள் கண்டறியப்பட்டுள்ளன.
இந்தத் திட்டத்தை நாளை (ஜூன் 20) பிகார் மாநிலம் ககாரியா மாவட்டத்திலிருந்து பிரதமர் மோடி காணொலிக் காட்சி மூலம் தொடங்கிவைக்கவுள்ளார்.
பிகாரில் 32, உத்தரப் பிரதேசத்தில் 31, மத்தியப் பிரதேசத்தில் 24, ராஜஸ்தானில் 22, ஒடிசாவில் நான்கு, ஜார்கண்டில் மூன்று என மொத்தம் 116 மாவட்டங்களில் இந்தத் திட்டம் முதல்கட்டமாக செயல்படுத்தப்படவுள்ளது.
ஏற்கனவே பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட நிதியிலிருந்து இந்தத் திட்டத்திற்காக ஒதுக்கப்பட்ட 50 ஆயிரம் கோடி ரூபாய் திரட்டப்படுகிறது என மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: 'தனியார் மருத்துவமனைகளைத் தேசியமயமாக்க வேண்டும்' - பத்திரிகையாளர் பி.சாய்நாத் !