கொரோனா தொற்றால் இந்தியாவில் இதுவரை 31 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது. இதையடுத்து, நாடு முழுவதும் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுவருகின்றன. இந்நிலையில், விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் ஹர்திப் சிங் பூரி செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது அவர் கூறுகையில், "கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக அரசு பல நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட துறைகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சூழ்நிலையை கண்காணிப்பதற்காக இரு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. தொற்று பாதிப்பு அதிகமுள்ள நாட்டிலிருந்து திரும்பும் பயணிகள் தீவிர மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனர்.
கொரோனா தொற்று இருப்பதாக சந்தேகிக்கப்படுபவர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன. கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாட்டிலிருந்து இந்தியா வருபவர்களுக்கும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி, மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் இடையே நடைபெற்ற சந்திப்பின்போது கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக நாட்டை தயார் நிலையில் வைப்பது குறித்து பேசப்பட்டது" என்றார்.
இதையும் படிங்க: டெல்லி கலவரம் குறித்து மத்திய அரசு பதிலளிக்காதது ஏன்? - திருச்சி சிவா