கரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் மத்திய அரசு நாடு முழுவதும் ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இதன் காரணமாக குடிபெயர்ந்த தொழிலாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஊரடங்கின் காரணமாக ஏற்பட்ட பொருளாதார இழப்பை சரிசெய்யும் விதமாக பொருளாதார மீட்பு நடவடிக்கைகாக மத்திய அரசு 20 லட்சம் கோடி மதிப்பிலான திட்டத்தை அறிவித்தது. அதில் சொந்த ஊருக்கு செல்லும் குடிபெயர்ந்த தொழிலாளர்கள், அவர்கள் தங்கியிருக்கும் பகுதிகளிலேயே மகாத்மா காந்தி ஊரக வளர்ச்சி திட்டத்தின் கீழ் வேலை செய்யலாம் என்று அறிவித்திருந்தது.
ஊரடங்கால் கடந்த ஏப்ரல் மாதம் முதல் வேலையின்றி சிரமப்படும் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் விதமாக 100 நாள் வேலை வாய்ப்புத் திட்டத்தின் கீழ் வேலை செய்யும் தொழிலாளர்களின் ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டது.
பொருளாதார மீட்பு திட்டத்தின் கீழ், ஊரடங்கால் பாதிக்கப்பட்ட ஏழை எளிய பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினரை பாதுகாக்கும் வகையில், பிரதான் மந்திரி கரிப் கல்யாண் யோஜனா மூலம் 1.7 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தின் மூலம், பெண்கள், மூத்த குடிமக்களுக்கு இலவசமாக உணவு தானியங்கள் வழங்கப்பட்டதோடு, அவர்களுக்கு நிவராணத் தொகையும் வழங்கப்பட்டது. மேலும், இந்த திட்டத்தின் மூலம் ஏப்ரல் மாதத்தில் 36.93 லட்சம் டன் உணவு தானியங்கள், 73.86 பயனாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
மேலும், மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்க ஏதுவாக 28 ஆயிரத்து 729 கோடி ரூபாயை மத்திய நிதியமைச்சகம் விடுவித்துள்ளது.