வெங்காயம், உருளைக்கிழங்கு ஆகியவற்றின் விலை, விண்ணைப் பிளக்கும் அளவுக்கு உயர்ந்து வருகிறது. இந்த விலை உயர்வைக் கட்டுப்படுத்தும் நோக்கில், உருளைக்கிழங்கை உரிமமின்றி இறக்குமதி செய்ய மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.
இது குறித்து வெளிநாட்டு வர்த்தக இயக்குனரகம் வெளியிட்ட அறிக்கையில், "2021ஆம் ஆண்டு, ஜனவரி 31ஆம் தேதி வரை, பூடான் நாட்டிலிருந்து உரிமமின்றி உருளைக்கிழங்கை இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு உருளைக்கிழங்கு இறக்குமதி செய்வதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. வெளிநாட்டு வர்த்தக இயக்குனரகத்திடமிருந்து அனுமதி வழங்கப்பட்ட பிறகே இறக்குமதி மேற்கொள்ளப்பட்டது.
இந்நிலையில், தற்போது கட்டுப்பாடுகளில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இறக்குமதிக்கும் வழிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. இறக்குமதி ஏற்றுமதிக்கான குறியீட்டின்படி, ஒரு விண்ணப்பதாரரை மட்டுமே கருத்தில் கொள்ள முடியும். அடுத்தடுத்து விண்ணப்பிப்பவர்கள், இறக்குமதி செய்யப்படும் உருளைக்கிழங்கு ஜனவரி 31ஆம் தேதிக்கு முன்பு இந்தியப் பகுதியை அடைவதை உறுதி செய்ய வேண்டும்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.