உலகளாவிய பெருந்தொற்று நோயான கரோனா வைரஸின் தாக்கம் இந்தியாவில் தீவிரமடைந்து வருகிறது. இதுவரை இந்தியாவில் 70 ஆயிரத்து 815 பேர் பாதிக்கப்பட்டும், 2 ஆயிரத்து 296 பேர் உயிரிழந்தும் உள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
நாளுக்குநாள் அதிகரித்துவரும் கரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து, மக்களைப் பாதுகாக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. மூன்றாம் கட்டமாக ஊரடங்கை மே17ஆம் தேதி வரை நீட்டித்துள்ளது. பாதிப்பைக் கட்டுப்படுத்தும் நோக்கில் வெளிநாட்டு தனியார் விமானங்களுக்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டிருந்தது.
அனைத்து வணிகப் பயண விமான நடவடிக்கைகளும் ஊரடங்கு காலத்தையொட்டி நிறுத்தப்பட்டுள்ளன. இருப்பினும், சரக்கு விமானங்கள், மருத்துவ வெளியேற்ற விமானங்கள் மற்றும் விமான ஒழுங்குமுறை டி.ஜி.சி.ஏ ஒப்புதல் அளித்த சிறப்பு விமானங்கள் இயக்க அனுமதிக்கப்பட்டுள்ளன.
கரோனா வைரஸ் பரவல் நெருக்கடியால் வெளிநாடுகளில் சிக்கித் தவித்துவரும் லட்சக்கணக்கான இந்தியர்களைத் தாயகம் அழைத்துவர மே 7ஆம் தேதி முதல் மத்திய அரசு நடவடிக்கைகளை முன்னெடுத்துவருகிறது. வெளிநாட்டில் உள்ள இந்தியர்களை அழைத்துவரும் இந்த முன்னெடுப்புகள் மத்திய வெளியுறவுத் துறையின்‘வந்தே பாரத் திட்டம்’என்ற பெயரில் இந்திய அரசின் விமானங்கள், கப்பல்கள் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், இந்த பேரிடரையடுத்து அரசு பல்வேறு திருத்த நடவடிக்கைகளை மேற்கொள்ள இருப்பதாகவும், அதில் ஒரு பகுதியாக விமானப் பயணிகளின் பயண வரலாறு குறித்து முழுமையான தகவல்களைத் திரட்டவும் முடிவு செய்துள்ளது.
இது தொடர்பாக சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகத்தைச் சேர்ந்த அலுவலர்கள் கூறுகையில்,“வெளிநாடுகளுக்கு செல்லும் விமானப் பயணிகளுக்கு இந்த செயலி பயன்பாட்டை கட்டாயமாக்குவது தொடர்பான ஆயத்தக் கலந்துரையாடலில் விமான நிறுவனங்களுடன் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் ஈடுபட்டு வருவதாக அறிய முடிகிறது. இதனையடுத்து, இது தொடர்பாக இறுதி முடிவெடுக்கப்படும். இந்தத் திட்டத்திற்கு விமான போக்குவரத்து அமைச்சகத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டால், கைப்பேசியில் இந்த ‘ஆரோக்யா சேது’ செயலி இல்லாத பயணிகள் விமான பயணத்தை மேற்கொள்ள அனுமதிக்கப்பட மாட்டார்கள்”என்கின்றனர்.
இந்த ‘ஆரோக்யா சேது’ செயலி, பயனர்களுக்கு கோவிட்-19 தொற்று ஆபத்து இருக்கிறதா என அடையாளம் காண உதவுகிறது. கரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து தற்காத்துக் கொள்வதற்கான வழிகள், அதன் அறிகுறிகள் உள்ளிட்ட முக்கியமான தகவல்களையும் இது மக்களுக்கு வழங்கும் வகையில் உருவாக்கம் செய்யப்பட்டுள்ளதாக தொழிற்நுட்ப வல்லுநர்கள் கூறுகின்றனர். மேலும், பயனர்களின் உடல்நிலை மற்றும் பயண வரலாற்றின்படி வண்ண குறியீட்டு-பெயரை வழங்குகிறது
இந்த முன்னெடுப்புகள் மத்திய விமானப் போக்குவரத்துத் துறையின் கண்காணிப்பின் கீழ் இந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன என்பது கவனிக்கத்தக்கது.
இதையும் படிங்க : வெளிநாட்டு அமைச்சர்களுடன் ஜெய்சங்கர் ஆலோசனை