முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில் இந்தியாவின் பொருளாதார மீட்பு நடவடிக்கைத் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் அறிவிக்கப்பட்ட கரோனா லாக்டவுன் காரணமாக நாட்டின் பொருளாதாரம் கடும் முடக்கத்தைக் கண்டுள்ளது.
அதை சீர்செய்யும் விதமாக மத்திய அரசு தற்சார்பு இந்தியா திட்டத்தின் கீழ் ரூ. 20 லட்சம் கோடி நிதிச் சலுகை அறிவிப்பை வெளியிட்டது. மேலும், ரிசர்வ் வங்கி சார்பில் வட்டிக்குறைப்பு நடவடிக்கை, கடன் தவணை நீட்டிப்பு ஆகிய அறிவிப்புகளை மேற்கொண்டுள்ளது.
இந்த நடவடிக்கைகள் சரிவை நோக்கிச் செல்லும் இந்திய பொருளாதாரத்தில் எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தாது என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் அவர், காங்கிரஸ் சார்பில் அரசுக்கு பல்வேறு பரிந்துரைகள் கொடுக்கப்பட்டன. குறிப்பாக ஏழை எளிய மக்களுக்கு தற்போதைய உடனடித் தேவையான நேரடி பணவுதவியை அரசு அறிவிக்க வேண்டும் எனத் தொடர்ச்சியாகத் தெரிவித்துவருகிறது. இதுவரை காங்கிரஸ் அறிவிப்புக்கு செவிக்கொடுக்காத மத்திய அரசு இனியாவது தனது போக்கை மாற்றிக்கொள்ள வேண்டும். பொருளாதார மீட்டெடுப்புக்கு காங்கிரஸ் தெரிவித்துள்ள பரிந்துரைகளை கேட்டு அமல்படுத்துவதைத் தவிர அரசுக்கு வேறு வழியில்லை எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: டெல்லியில் ராணுவ உயர்மட்ட குழு முக்கிய ஆலோசனை