சுகாதாரமான கழிவறையின் தேவையை வலியுறுத்தி உலகம் முழுவதும் நேற்று (நவ. 19) சர்வதேச கழிவறை நாள் அனுசரிக்கப்பட்டது.
இதனை முன்னிட்டு மனித மலத்தை மனிதனே அள்ளும் கொடுமைக்கு எதிராக இந்தியாவில் 'சஃபாய் மித்ரா சுரக்ஷா' என்ற பெயரில் புதிய ஸ்வட்ச் பாரத் சவாலை இணை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தொடங்கிவைத்தார்.
காணொளி மூலமாக இந்தியாவில் உள்ள 243 நகரங்களில் உள்ள அரசியல் தலைவர்கள், அரசு பணியாளர்கள், பொது மக்களுக்கு அவர் இந்த சவாலை விடுத்துள்ளார்.
பின்னர் இதுதொடர்பாக பேசிய அவர், "மனிதர்களின் கழிவை சக மனிதரே அள்ளும் கொடுமை நாட்டின் மிக முக்கிய பிரச்சினையாக உள்ளது. இந்த விவகாரம் அபாயகரமான பிரச்சினையாகும். சக மனிதர்கள் இதன் காரணமாக தங்களது உயிர்களை இழக்கின்றனர்.
எந்தவொரு மனிதரும் துப்பரவுப் பணியாளர் என்ற வகையில், பாதாளச் சாக்கடைக்குள்ளோ அல்லது உலர் கழிவுநீர் தொட்டிக்குள்ளோ நுழையத் தேவையில்லை என்பதை உறுதி செய்வதில் இந்திய அரசு 100% உறுதிபூண்டுள்ளது.
முற்றிலும் தவிர்க்க முடியாத சூழ்நிலையில், அதுவும் தேவையான பாதுகாப்பு கருவிகளுடன் மட்டுமே துப்புரவுப் பணியாளர்கள் இத்தகைய பணியில் பாதுகாப்பு மற்றும் மாண்புக்கு குறை நேராத வகையில் ஈடுபடுத்தப்படலாம்.
துப்புரவுத் தொழிலாளர்களின் உயிர் பாதுகாப்பு, கண்ணியம் எப்போதும் காக்கப்படவேண்டும். அதனடிப்படையில்தான் ஸ்வட்ச் பாரத் மிஷன்-அர்பன் (எஸ்.பி.எம்-யு) எனும் பெயரில் பிரதமர் நரேந்திர மோடியின் வழிகாட்டலில் சஃபாய் மித்ரா சுரக்ஷா சவால் விடுப்படுகிறது.
2013ஆம் ஆண்டு டிச. 6ஆம் தேதியிலிருந்து இந்தியாவில் மனிதக்கழிவுகளை அகற்றுவது, சாக்கடைகளை சுத்தம் செய்வது போன்றவற்றில் மனிதர்களை ஈடுபடுத்துவது தடை செய்யப்பட்டுள்ளது.
இருந்தபோதிலும், துப்புரவுப் பணியில் ஈடுபட்டுள்ளவர்கள் பலர் உயிரிழக்கும் சம்பவம் தொடர்கதையாகி உள்ளது.
கவலைக்குரிய இந்த பிரச்சினையில் பொருளாதார ரீதியாக பின்தங்கிய மற்றும் ஒடுக்கப்பட்ட சமூகங்களைச் சேர்ந்தவர் பெருமளவு தங்களது உயிர்களை இழந்துள்ளனர்.
இனி இத்தகைய வகையில் துப்புரவுப் பணியாளர்கள் உயிரிழப்பைத் தடுக்க, தவிர்க்க ஒவ்வொருவரும் விழிப்புடனும் பொறுப்புடனும் இருக்கவேண்டும்.
அந்த வகையில், மனித கழிவுகளை மனிதர்களே அள்ளும் அவலத்தைத் தடுக்க, இந்த சவாலை அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், அதிகாரத்துவத்தினர், நாட்டின் குடிமக்கள் என அனைவரும் ஏற்கவேண்டும்" என கூறினார்.
ஸ்வட்ச் பாரத் அபியான் என்ற திட்டத்தில் ஒரு கோடிக்கும் மேற்பட்ட கழிவறைகள் கட்டப்பட்டிருந்தாலும் அக்கழிவுகளை அகற்ற தாழ்த்தப்பட்ட மக்கள் மீண்டும் இத்தொழிலில் ஈடுபடுத்தும்படி நிலைமை உள்ளது என இந்தியாஸ்பென்ட் மற்றும் வாட்டர் எய்டு செய்த ஆய்வு கூறுகிறது.
இதுதொடர்பாக கருத்து தெரிவித்த சஃபாய் கரம்சாரி அந்தோலன் அமைப்பின் நிறுவனரான பெசவாடா வில்சன், "இந்திய அரசு மனிதக்கழிவுகளை அகற்றும் பணி தொடர்பாக நிதி ஒதுக்கீடு செய்வதாகக் கூறினாலும் கூட அதனை மேம்படுத்த அக்கறை காட்டுவதில்லை ” என கூறுகின்றார்.
இந்தியாவில் 62,904 மனிதக்கழிவகற்றும் பணியாளர்கள் உள்ளதாக அரசு கணக்கு கூறுகிறது. பதினெட்டு மாநிலங்களில் ஆய்வு செய்து இந்திய அரசு இத்தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களை அடையாளம் கண்டறிந்துள்ளது.
அதேபோல, மனிதக்கழிவை மனிதர்களே அகற்றும் பசி தடைச் செய்யப்பட்டு ஏழு ஆண்டுகள் கடந்த நிலையில் 2020ஆம் ஆண்டிலும் ஐந்து நாள்களுக்கு ஒருவர் என கழிவுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டு உயிரை விடுவதாக மற்றொரு புள்ளிவிவரம் கூறுகிறது.