பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு கூட்டம் (சி.சி.இ.ஏ.) பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று (டிச.16) டெல்லியில் நடைபெற்றது. அதில் நாடு முழுவதுமுள்ள கரும்பு விவசாயிகள், சர்க்கரை ஆலைகளில் பணிபுரியும் தொழிலாளர்கள் பயன்பெறும் வகையில் பல முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக, ஐந்து கோடி கரும்பு விவசாயிகளும் அவர்கள் சார்ந்தவர்களும் பயனடையும் வகையில் சர்க்கரை ஆலைகள் சார்பில் வழங்கப்பட வேண்டிய நிலுவைத் தொகையில் சுமார் 3500 கோடி ரூபாயை உதவித் தொகையாக வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்த உதவித் தொகையானது, சர்க்கரை ஆலைகள் சார்பாக விவசாயிகளின் வங்கி கணக்குகளில் நேரடியாக வரவு வைக்கப்படும் என அமைச்சரவைக் குழு தெரிவித்துள்ளது.
அதுமட்டுமல்லாமல் சர்க்கரை ஆலைகள் மற்றும் அதன் துணை நடவடிக்கைகளில் பணியாற்றிவரும் சுமார் ஐந்து லட்சம் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை உறுதிசெய்யவும் மத்திய அரசு பல்வேறு திட்டங்களை மேற்கொள்ளவிருக்கிறது.
2020-21ஆம் நிதியாண்டிக்கான அதிகபட்ச ஏற்றுமதி ஒதுக்கீட்டு வரையறையின்படி, சர்வதேச அளவில் சர்க்கரையை ஏற்றுமதி செய்ய 60 லட்சம் மெட்ரிக் டன்னுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக உற்பத்தி செய்யப்பட்ட உபரி சர்க்கரை இருப்புகள் விரைந்து வணிகச் சந்தைக்கு செல்லும். உள்நாட்டு போக்குவரத்து மற்றும் சரக்குக் கட்டணங்களின் பிற செயலாக்க செலவுகளில் அரசின் இந்த மானியம் உதவும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இந்த மானியம் விவசாய உற்பத்திகளை கையாளுதல், மேம்படுத்துதல் மற்றும் சந்தைப்படுத்தல் செலவினங்களுக்கான செலவுகளை ஈடுகட்ட பயன்படுத்தப்படலாம் என கூறப்படுகிறது.
இதையும் படிங்க : பின்னடைவை சந்திக்கிறாரா மம்தா பானர்ஜி?