மாநிலங்களின் ஒன்றியமாக இந்தியா செழித்து வளரும் என்கிறது இந்திய அரசியலமைப்பின் முதல் அட்டவணை. ஜனநாயகத்தின் அடித்தளம் நன்கு திட்டமிடப்பட்ட கட்டமைப்புடன் இருக்குமேயானால் நாடாளுமன்றத்தில் ஜனநாயகம் சிறந்து விளங்கும் என்று அரசியல் சாசனத்தை உருவாக்கியவர்கள் கருதினார்கள். ஆனால் இன்றைய யதார்த்தமோ அதற்கு முற்றிலும் வேறானதாக இருக்கிறது. ’நான்தான் அரசாங்கம்’ என்று டெல்லியின் துணைநிலை ஆளுநர் துணிச்சலுடன் கூறியிருப்பது இந்திய மக்களை அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது.
மேற்கு வங்கம், கேரளா ஆகிய மாநிலங்களின் ஆளுநர்களைச் சுற்றி சமீபகாலமாக எழுந்துள்ள சர்ச்சைகள் இந்தியாவின் கூட்டாட்சித் தத்துவத்துக்குப் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியதாக இருக்கின்றன. மத்திய அரசு இயற்றும் சட்டங்களை ஆதரிக்க வேண்டியது தனது கடமை என்று கேரள ஆளுநர் ஆரிஃப் முகமது கான் கூறுதுவது வியப்பை ஏற்படுத்துகிறது. தான் ஒன்றும் ரப்பர் ஸ்டாம்ப் ஆளுநர் இல்லை என்றும் அவர் கூறுகிறார். குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக தன்னிடம் ஆலோசிக்காமல் உச்ச நீதிமன்றத்தை நாடியது தொடர்பாக கேரள அரசு அறிக்கை அளிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியது அம்மாநில அரசியலில் சூட்டைக் கிளப்பியுள்ளது. கேரளாவைப் போலவே மேற்கு வங்கத்தின் நிலைமையும் அவ்வாறே இருக்கிறது.
அம்மாநில ஆளுநரான ஜக்தீப் தங்கர், சர்ச்சைகளை ஏற்படுத்துபவராகவும் கடுமையான விமர்சனங்களை எதிர்கொள்பவராகவும் இருந்துவருகிறார். மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியின் முடிவுகளை வெளிப்படையாக குறைகூறுகிறார் ஜக்தீப் தங்கர். இதன் காரணமாகவே, ‘பாஜகவின் கையாளாக இருக்கும் ஜக்தீப் தங்கரே வெளியேறு’ என ஜாதவ்பூர் பல்கலைக்கழகத்தில் அவருக்கு எதிராக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாநில அரசு, அரசியல் சாசனத்திற்கு உட்பட்டு இயங்குகிறதா என்பதை கண்காணிப்பதைத் தாண்டி ஆளுநருக்கு அதிகாரங்கள் ஏதும் இல்லை. ஆளுநர்களுக்கான அதிகாரங்கள் வரையறுக்கப்பட்டவை. பெயரளவுக்குத்தான் ஆளுநர்களுக்கு அதிகாரம் உள்ளது. மாநிலத்தில் அரசியலமைப்பு நெருக்கடி ஏற்படும்போது மட்டுமே, ஆளுநர் அதிகாரத்துடன் தான் மேற்கொள்ள வேண்டிய கடமையைச் செய்ய வேண்டியவராகிறார்.
சர்ச்சைகளின் மையமாக கேரள, மேற்கு வங்க ஆளுநர்கள் மாறியிருப்பது அவர்கள் வரம்புகளை மீறி செயல்படுவதை வெளிச்சம் போட்டுக்காட்டியுள்ளது. இவ்விரு மாநிலங்களைச் சேர்ந்த பாஜக அல்லாத அரசியல் கட்சிகள் தெரிவிக்கும் கருத்துக்கள் ஜனநாயகத்தை நேசிப்பவர்களின் எண்ணத்தையே பிரதிபலிக்கின்றன. ஆளுநர்களாக எத்தகையவர்களை நியமிக்க வேண்டும் என்பது தொடர்பாக ஜவஹர்லால் நேரு அரசியல் சாசன அவையில் பேசும்போது, "அரசியல் தலைவர்கள் தனிப்பட்ட லாபத்திற்காக அதிக அதிகாரங்களை விரும்புகிறார்கள். ஆனால் கல்வியாளர்களோ அல்லது பிற துறைகளில் உள்ள வல்லுநர்களோ, அரசாங்கத்துடன் முழுமையாக ஒத்துழைக்கிறார்கள்” எனக் குறிப்பிட்டார். லட்சியங்களுக்கு முக்கியத்துவமும் கெளரவமும் அதிகமாக இருந்த அந்த நாள்களிலேயே, ஆளுநர்கள் நியாயமற்ற அரசியலில் ஈடுபடுவதை தடுப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்தது காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு.
இத்தனைக்கும் அந்தக் கட்சி பல தசாப்தங்களாக மத்தியில் ஆட்சியிலிருந்தபோதும், ஆளுநர்கள் விஷயத்தில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. கடந்த காலத்தில், பிகார் சட்டப்பேரவைக் கலைத்ததில் பூட்டா சிங்கிற்கு இருந்த பங்கையும், மத்திய அமைச்சரவையின் அணுகுமுறையையும் உச்ச நீதிமன்றம் குறை கூறியது. ஆளுநர் பதவிக்கு மரியாதையை ஏற்படுத்தியவர்களாக ஜாகிர் உசேன், சரோஜினி நாயுடு, சுர்ஜித் சிங் பர்னாலா போன்றவர்கள் இருந்திருக்கிறார்கள். அவர்களுடன் ஒப்பிடும்போது, ராம் லால், சிப்டே ராசி, பண்டாரி போன்ற மோசமான அரசியல்வாதி ஆளுநர்களின் எண்ணிக்கையே அதிகம்.
ஆளுநர்களை மத்திய அமைச்சர்களாகவும் அமைச்சர்களை ஆளுநர்களாகவும் நியமிக்கும் கலையில் நிபுணத்துவம் பெற்று விளங்கியது காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி. தற்போது மத்தியில் ஆட்சியிலுள்ள தேசிய ஜனநாயக கூட்டணியும் கூட, ஆளுநர்கள் மூலம் பாஜக அல்லாத மாநிலங்களுக்கு தொல்லைகளை கொடுப்பதில் தனது ‘திறமையை’ வெளிப்படுத்திவருகிறது. கேரளாவிலும் மேற்கு வங்கத்திலும் ஏற்பட்டுள்ள அரசியல் சிக்கல்கள் இதற்கு வெளிப்படையான எடுத்துக்காட்டுகள். உள்ளாட்சி அமைப்புகளில் உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கான கேரள அரசின் சட்டத் திருத்தத்தை நிறுத்திவைத்துள்ள ஆளுநர் ஆரிஃப் கான், குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பாக அம்மாநில அரசை குற்றம்சாட்டிவருவதுதான் வியப்பக்குரியது.
பல்வேறு கேள்விகளைத் தொடர்ந்து எழுப்புவதன் மூலம், மேற்கு வங்க அரசின் பொறுமையை அம்மாநில ஆளுநர் ஜக்தீப் தங்கர் சோதித்துவருகிறார். அரசியல் சாசன அதிகாரம் கொண்டவர்களான ஆளுநர்கள், அதற்கு மரியாதை ஏற்படும் வகையில் நடந்துகொள்ள வேண்டும். அப்படிப்பட்டவர்கள் இப்படியா செயல்படுவது? ராஜ் பவன்களை அரசியலாக்கி, அதன் மதிப்பை குறைத்ததில் அனைத்துக் கட்சிகளுக்கும் சமமான பங்கிருக்கிறது. 1996 – 1998 காலகட்டத்தில் உத்தரப் பிரதேசத்தின் ஆளுநராக இருந்த ரமேஷ் பண்டாரி, அம்மாநிலத்தின் அப்போதைய பாஜக அரசை வேரோடு பிடுங்கி எரிய தீவிரமாக முயன்றார். பிகாரில் லாலு பிரசாத் யாதவ் ஆட்சிக்கு நெருக்கடி கொடுப்பதற்காக அப்போது ஆளுநராக இருந்த சுந்தர் சிங் பண்டாரி அனைத்து நெறிமுறைகளையும் முற்றிலுமாக மீறினார்.
ஜம்மு-காஷ்மீர் சட்டப்பேரவை முடக்கப்பட்டதன் பின்னணியில் இருந்தவர் அம்மாநில ஆளுநராக இருந்த சத்யபால் மாலிக். ஆளுநர்கள் கட்சி சார்பற்றவர்களாகவும் பாரபட்சமற்ற முறையிலும் செயல்பட வேண்டும் என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை எஸ்.ஆர். பொம்மை vs மத்திய அரசு வழக்கில் கடந்த 1994 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் வழங்கியது. அரசியலமைப்பின் 356ஆவது பிரிவின் விதிகள், அது தொடர்பான பிரச்னைகள் குறித்தும் அது விரிவாக விவாதித்தது. இதற்கு முன்பாக, ஆளுநர்களின் செயல்பாடு எவ்வாறு இருக்க வேண்டும் என்பது குறித்து சர்க்காரியா கமிஷன் விரிவான பரிந்துரைகளை வழங்கியது. தங்களது கட்சிக்கு விசுவாசமாக ஆளுநர்கள் செயல்பட்டால் அது அரசியல் கொந்தளிப்புக்கு வழிவகுத்துவிடும் என்று அது சுட்டிக்காட்டியது.
எனினும், சர்க்காரியா கமிஷனின் பரிந்துரைகள் கண்டுகொள்ளப்படாமலேயே உள்ளன. இத்தகைய அணுகுமுறைகளின் காரணமாகவே அரசியலமைப்பின் அடித்தளங்கள் ஆட்டம் காண்கின்றன. ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு, 14ஆவது தலைமை விஜிலென்ஸ் கமிஷனராக இருந்த பி.ஜே. தாமஸின் நியமனம் ரத்து செய்யப்பட்டபோது, அந்தப் பதவிக்கு தார்மீக ரீதியில் தகுதியான ஒருவரை நியமிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் இடையே பாலமாக செயல்பட வேண்டியவர்கள் ஆளுநர்கள். தனது அதிகாரம் என்ன? தனது பொறுப்பு என்ன? என்பதை உணர்ந்தவர்கள் ஆளுநர்களாக நியமிக்கப்படும்போதுதான், ராஜ் பவன்களைப் பாதித்துள்ள கிரகணம் அகற்றப்படும்.
இதையும் படிங்க: இந்தியாவுக்கு வலுவான எதிர்க்கட்சி தேவை - அபிஜித் பானர்ஜி