புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி வார இறுதி நாட்களில் புதுச்சேரியின் கிராமப் பகுதிகள், அங்கிருக்கும் நீர்நிலைகள் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்துவருகிறார். அதன்படி, இன்று காலை புதுச்சேரி பாகூர் ஏரிக்குச் சென்ற அவர், மாணவர்கள், தொண்டு நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள் உள்ளிட்டவற்றின் உதவியுடன் ஏரியைச் சுற்றி 3,000 மரக்கன்றுகளை நடும் திட்டத்தைத் தொடங்கி வைத்தார்.
சில பகுதிகளில் காரில் செல்லமுடியாது என்பதால் அங்கு செல்ல மாட்டு வண்டிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. மாட்டு வண்டியின் மீது ஏறிய துணைநிலை ஆளுநர் கிரண்பேடி, தனது செல்ஃபோன் மூலம் காட்சிகளைப் பதிவு செய்துவிட்டு செல்ஃபியும் எடுத்துக்கொண்டார். சிறிது தூரம் சென்றதும் கிரண் பேடி தனது உதவியாளரிடம் செல்ஃபோனை அளித்துள்ளார்.
அதன்பின், சிறிது நேரத்தில் மீண்டும் அவர் செல்ஃபோனைக் கேட்கும்போது அவரது செல்ஃபோன் காணாமல் போனது தெரியவந்தது. மேலும், ஆளுநருடன் அவரது உதவியாளர் மாட்டுவண்டியில் சென்றபோது, செல்ஃபோன் தவறியிருக்கலாம் என்று தெரிகிறது.