பொதுத்துறை நிறுவனங்களின் மோசமான நிலைக்கு முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், முன்னாள் ரிசரவ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன் ஆகியோர்தான் காரணம் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் குற்றம்சாட்டியிருந்தார். இதற்கு பதிலளிக்கும் விதமாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டார்.
அப்போது அவர் கூறுகையில், "பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்கு பிரச்னை எங்கு உள்ளது என்பதை கண்டறிய வேண்டும். ஆனால் எதிர்க்கட்சியினர் மீது தொடர்ந்து குற்றம்சாட்டப்பட்டுவருகிறது. எனவேதான், அரசால் பிரச்னைக்கு தீர்வு காணமுடியவில்லை. நான் பிரதமராக இருந்தபோது சில பலவீனங்கள் இருந்தது உண்மை. ஆனால், ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு மேல் அனைத்து தவறும் இருக்கிறது என்பது தவறு.
பஞ்சாப் மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கியில் நடந்த மோசடியால் 16 லட்சம் முதலீட்டாளர்கள் பாதிப்படைந்தனர். மத்தியிலும் மாநிலத்திலும் ஆளும் பாஜக அரசுகள் மக்கள் நல திட்டங்களை செயல்படுத்துவதில்லை. சாவர்கருக்கு பாரத ரத்னா அளிக்கவுள்ளதாக பாஜக தன் தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளது. நாங்கள் சாவர்கருக்கு எதிரானவர்கள் அல்ல. ஆனால், அவரின் இந்துத்துவ கொள்கைக்கு எதிரானவர்கள்" என்றார்.