கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு, பொது போக்குவரத்து சேவைகள் முற்றிலும் முடக்கப்பட்டது. இதன்காரணமாக உள்நாட்டு, சர்வதேச விமான சேவைகள் முற்றிலும் தடைசெய்யப்பட்டு, ஏராளமான பயணிகள் விமானப் போக்குவரத்திற்காக முன்பதிவு செய்திருந்த டிக்கெட்டுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டது.
இந்நிலையில், மத்திய அரசு மூன்றில் ஒரு பங்கு விமான சேவைகள் தொடங்க அனுமதியளித்துள்ளது. இதையடுத்து, ஏர் இந்தியா நிறுவனம் கடந்த மார்ச் 23ஆம் தேதி முதல் இம்மாதம் 31ஆம் தேதி வரை முன்பதிவு செய்து ரத்தாகியுள்ள ஏர் இந்தியா விமான டிக்கெட்டுகளுக்கு கூடுதல் கட்டணங்கள் வசூலிக்கப்படாமல் மீண்டும் பயணிக்க அனுமதிக்கப்படுவர் என அறிவித்துள்ளது.
அதுமட்டுமின்றி, இவர்கள் மே 25ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 24ஆம் தேதிவரை இயக்கப்படவுள்ள ஏர் இந்தியா விமானங்களில் பயணிக்கலாம் எனவும், பயணிக்கும் இடங்களில் ஏதேனும் மாற்றங்கள் இருப்பின் அதற்கேற்றாற்போல கட்டணங்கள் மாற்றியமைக்கக்கூடும் எனவும் தெரிவித்துள்ளது.
மேற்கூறிய மாற்றங்களை ஏர் இந்தியா கால் சென்டர், ஏர் இந்தியா முன்பதிவு அலுவலகங்கள், பரிந்துரைக்கப்பட்ட ஏர் இந்தியா முகவர்களிடம் செய்யலாம் எனவும் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: ஏர் இந்தியா விமானத்தில் நடு இருக்கைகளில் பயணிகள் அமர அனுமதி!